மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா காந்தி நாளை ஆலோசனை


மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா காந்தி நாளை ஆலோசனை
x
தினத்தந்தி 11 Sep 2019 4:14 PM GMT (Updated: 11 Sep 2019 4:15 PM GMT)

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்களுக்கான கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நாளை (12-ம்தேதி) நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்களுக்கான கூட்டம்  டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாளை (12-ம்தேதி) நடைபெற உள்ளது.

இந்த காலகட்டத்தில் சட்டப்பேரவை கட்சி தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் அனைத்து மாநிலங்களிலும் கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

விரைவில் மகாராஷ்டிரா, அரியானா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் கட்சியின் நிலவரங்கள், தேர்தலை சந்திக்க தேவையான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

சோனியாகாந்தி மீண்டும் கட்சி தலைவரான பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது ஆகும். சமீப காலத்தில் பல்வேறு மாநிலங்களிலும் கட்சி தலைமையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் சில இடங்களில் உள்கட்சி பூசல் வெடித்துள்ளது. இதை முடிவுக்கு கொண்டுவருவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

மோடி அரசு 2-வது முறையாக பதவி ஏற்று 100 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் பா.ஜனதா அரசின் தோல்விகளை மக்களிடம் கொண்டுசெல்வது குறித்த ஆலோசனைகளை சோனியாகாந்தி வழங்க உள்ளார். நாட்டில் தற்போதுள்ள பொருளாதார மந்தநிலை குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

கடந்த வாரம் பா.ஜனதா அரசு 100நாள் சாதனையை கொண்டாடியது. தற்போது நாட்டில் நிலவும் மந்தநிலையில் பா.ஜனதா அரசு 100 நாள் சாதனை கொண்டாடுவதா? என காங்கிரஸ் விமர்சித்தது. ஆனால் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறவில்லை.

குறிப்பாக விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள மகாராஷ்டிரா  உள்ளிட்ட 4 மாநிலங்களிலும் கூட எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தவில்லை. இதுகுறித்தும் விவாதித்து எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொள்ள சோனியா காந்தி ஆலோசனை வழங்குவார் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

Next Story