வட இந்தியர்களை அவமதித்ததாக மத்திய மந்திரிக்கு பிரியங்கா கண்டனம்


வட இந்தியர்களை அவமதித்ததாக மத்திய மந்திரிக்கு பிரியங்கா கண்டனம்
x
தினத்தந்தி 16 Sept 2019 4:45 AM IST (Updated: 16 Sept 2019 2:29 AM IST)
t-max-icont-min-icon

வட இந்தியர்களை அவமதித்ததாக மத்திய மந்திரிக்கு பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்வார், ‘திறமையின்மை காரணமாகவே வட இந்திய இளைஞர்களால் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற முடியவில்லை’ என்று கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மந்திரியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘5 ஆண்டுகளாக நீங்கள் அரசில் இருக்கிறீர்கள். உங்களால் வேலைவாய்ப்பை உருவாக்க முடியவில்லை. இருக்கின்ற வேலைவாய்ப்புகளும் பொருளாதார மந்தநிலையால் பறிபோகிறது. அரசு ஏதாவது செய்யும் என இளைஞர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் நீங்கள் வட இந்தியர்களை அவமதித்து இருக்கிறீர்கள்’ என்று குற்றம் சாட்டி உள்ளார்.

காங்கிரசின் மற்றொரு தலைவரான பிரமோத் திவாரியும், ‘கங்வாரின் கருத்துகள் துரதிர்ஷ்டவசமானவை, கண்டனத்துக்குரியவை’ என குறிப்பிட்டு உள்ளார்.


Next Story