ஒரு சமூகம் முன்னேறுவதற்கு இடஒதுக்கீடு உதவாது -நிதின் கட்காரி


ஒரு சமூகம் முன்னேறுவதற்கு இடஒதுக்கீடு உதவாது -நிதின் கட்காரி
x
தினத்தந்தி 17 Sept 2019 10:58 PM IST (Updated: 17 Sept 2019 10:58 PM IST)
t-max-icont-min-icon

இடஒதுக்கீட்டால் மட்டுமே ஒரு சமூகம் முன்னேறும் என்பது உண்மை அல்ல என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.

நாக்பூர்,

நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்காரி பங்கேற்றார். அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலி சமூகத்தினர் தங்களுக்கு சாதி அடிப்படையில் கட்சியில் இடஒதுக்கீடு செய்து தேர்தலில் சீட் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

இது தொடர்பாக நிதின் கட்காரி கூறுகையில், “பின்தங்கிய சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கு இடஒதுக்கீடு என்பது அவசியம்தான். ஆனாலும் அது மட்டுமே அவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதிப்படுத்தாது. கல்வி, சமூக மற்றும் பொருளாதார வழிமுறைகள் மூலமே ஒரு சமூகம் முன்னேற்றம் அடையமுடியும்.

சிலருக்கு, அவர்கள் செய்த பணிகள் அடிப்படையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. உடனடியாக, அவர்கள், தங்களது ஜாதியை முன்னே கொண்டு வருகின்றனர். ஜார்ஜ் பெர்ணான்டஸ், எந்த ஜாதியை சேர்ந்தவர்? அவர் எந்த ஜாதியையும் சேர்ந்தவர் அல்ல. அவர் கிறிஸ்துவர். ஜாதி காரணமாக, இந்திரா பிரதமராக வரவில்லை. அசோக் கெலாட்டை மற்ற ஜாதியினரும் ஆதரித்ததால் தான் ராஜஸ்தான் முதல்வராக பதவி ஏற்றார்.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சொல்கின்றனர். இதனை நான் ஆதரிக்கிறேன். அதேநேரத்தில், அவர்களிடம் ஒன்றை கேட்கிறேன் இந்திரா, இட ஒதுக்கீட்டை பெற்றாரா? பல ஆண்டுகள் ஆட்சி செய்து பிரபலம் ஆனார். வசுந்தரா ராஜே மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் எந்த இடஒதுக்கீட்டை பெற்றனர்? சமுதாயத்தில் அடக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் சமுதாய மற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story