பிரதமர் மோடியின் மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி


பிரதமர் மோடியின் மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 18 Sep 2019 9:24 AM GMT (Updated: 18 Sep 2019 9:59 AM GMT)

பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென்னை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.

கொல்கத்தா, 

2019-பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமூல் கட்சியினருக்கும் பாஜகவிற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. 

வடமாநிலங்களில் புதிய குடியுரிமை பட்டியல் கணக்கெடுப்பு, சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் சுக்லாவுக்கு எதிரான சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை போன்ற விவகாரங்களில் மேற்கு வங்காள முதல்வரும் திரிணாமூல் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, மத்திய பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக சாடி வருகிறார்.

இந்த சூழலில், மம்தா பானர்ஜி இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.  டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இதற்காக கொல்கத்தா விமான நிலையத்திற்கு மம்தா பானர்ஜி வந்தார். அப்போது,  பிரதமர் மோடியின் மனைவியும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான ஜசோதா பென் விமான நிலையம் வந்திருந்தார்.  

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கல்யாணேஸ்வரி கோயிலில் வழிபட 2 நாள் பயணமாக  வந்த ஜசோதாபென், வழிபாட்டை முடித்த பின், ஊர் செல்வதற்காக  கொல்கத்தா விமான நிலையம் வந்தார். 

விமான நிலையத்தில் ஜசோதா பென்னை கண்ட மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர்.  தொடர்ந்து, ஜசோதா பென்னுக்கு புடவை ஒன்றையும் மம்தா பரிசளித்துள்ளார். 

Next Story