காஷ்மீரில் மிர்வாய்ஸ் பரூக் உள்பட 5 அரசியல் தலைவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வாய்ப்பு


காஷ்மீரில் மிர்வாய்ஸ் பரூக் உள்பட 5 அரசியல் தலைவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வாய்ப்பு
x
தினத்தந்தி 20 Sep 2019 6:29 AM GMT (Updated: 20 Sep 2019 6:29 AM GMT)

காஷ்மீரில் மிர்வாய்ஸ் பரூக் உள்பட 5 அரசியல் தலைவர்கள் விரைவில் விடுதலையாக உள்ளனர்.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த  ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது.  அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால், உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

காஷ்மீர் மூத்த அரசியல்வாதியான பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.  பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டு இருப்பதால் மற்ற தலைவர்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளனர்.

காஷ்மீரில் சலுகைகள் ரத்து செய்யப்பட்டு இன்றுடன் 46 நாட்கள் ஆகிறது. இந்த 46 நாட்களும் கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இன்னமும் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. வாகன போக்குவரத்தும் அதிகரிக்கவில்லை.

இதற்கிடையே காஷ்மீரில் சுமூக நிலையை முழுமையாக கொண்டு வர சில புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மக்கள் மனதில் அமைதியை ஏற்படுத்தும் புத்துணர்ச்சி மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் மன மகிழ்ச்சி மன்றங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்கள் மனதில் வன்முறையில் இருந்து சாதாரண நிலைக்கு மாற்ற முயற்சி நடக்கிறது.

இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியில் செல்ல விரும்புபவர்கள் நிபந்தனையுடன் வெளியே செல்லலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. அதாவது விடுதலை செய்யப்பட்ட பிறகு அரசியல் நடவடிக்கைகளில் எதுவும் ஈடுபட மாட்டோம் என்று பிணை பத்திரம் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு செல்லலாம் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. பெரும்பாலான தலைவர்கள் இந்த நிபந்தனையை ஏற்கவில்லை.

ஆனால் கூரியத் தலைவர் மிர்வாஸ் உமர்பாரூக், 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மக்கள் மாநாட்டு தலைவர் ஒருவர் ஆகிய 5 பேர் நிபந்தனையை ஏற்று விடுதலையாக முன் வந்தனர். அவர்களிடம் பிணை பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. எனவே இந்த 5 பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிணைப்பத்திரத்தை மீறும் பட்சத்தில் உடனடியாக அவர்களை கைது செய்ய சட்டம் வழிவகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story