தேசிய செய்திகள்

ரூ.1½ லட்சம் கோடி வரி சலுகை: “வரலாற்று சிறப்பு வாய்ந்தது” - நிர்மலா சீதாராமன் நடவடிக்கைக்கு மோடி பாராட்டு + "||" + Rs. 1½ Lakh Crore Tax Benefit: “Historical Spacial” - Modi applauds Nirmala Sitharaman's move

ரூ.1½ லட்சம் கோடி வரி சலுகை: “வரலாற்று சிறப்பு வாய்ந்தது” - நிர்மலா சீதாராமன் நடவடிக்கைக்கு மோடி பாராட்டு

ரூ.1½ லட்சம் கோடி வரி சலுகை: “வரலாற்று சிறப்பு வாய்ந்தது” - நிர்மலா சீதாராமன் நடவடிக்கைக்கு மோடி பாராட்டு
ரூ.1½ லட்சம் கோடி வரி சலுகை அறிவிப்புகளை வெளியிட்ட நிர்மலா சீதாராமனின் நடவடிக்கையை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். இது வரலாற்று சிறப்பு வாய்ந்த நடவடிக்கை என அவர் குறிப்பிட்டார்.
புதுடெல்லி,

கம்பெனிகளுக்கு சுமார் ரூ.1½ லட்சம் கோடி வரி சலுகை அறிவிப்புகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று கோவா தலைநகர் பனாஜியில் வெளியிட்டார்.

அவர் அதிரடியாக வெளியிட்ட அறிவிப்புகளை தொடர்ந்து பிரதமர் மோடி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டு, நிர்மலா சீதாராமனின் நடவடிக்கையை பாராட்டினார்.


அதில் அவர், “கம்பெனிகளுக்கான வரி குறைப்பு நடவடிக்கை, வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு மாபெரும் ஊக்கமாக அமையும். உலகமெங்கும் இருந்து தனியார் முதலீடுகளை கொண்டு வரும். நமது தனியார் துறைகளில் போட்டிகளை மேம்படுத்தும். கூடுதலான வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதன் விளைவு 130 கோடி இந்தியர்களுக்கு வெற்றியாக அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை மந்திரி அமித் ஷா கருத்து தெரிவிக்கையில், “இந்தியாவை மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு மோடி அரசு உறுதி கொண்டுள்ளது. நிதி மந்திரியின் இந்த முடிவும், நேரடி அன்னிய முதலீடுகள் தொடர்பான விதிகளை தளர்த்தும் முந்தைய அறிவிப்புகளும் மோடி அரசின் நோக்கத்தை அடைவதில் நீண்ட தூரம் செல்லும். இந்த துணிச்சலான நடவடிக்கைக் காக பிரதமர் நரேந்திர மோடிக் கும், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கும் வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

தொழில், வர்த்தக மந்திரி பியூஸ் கோயல், “உள்நாட்டு நிறுவனங்களுக்கான வரியை சுமார் 35 சதவீதத்தில் இருந்து, 22 சதவீத அளவுக்கு குறைத்து இருப்பதற்காக நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு நன்றி” என்று கூறினார்.

பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான், “நிதி மந்திரியின் அறிவிப்புகள், பெருநிறுவன தொழில் துறையில் புதிய எழுச்சியையும், சக்தியையும் பாய்ச்சி உள்ளது” என்று குறிப்பிட்டார்.

நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கருத்து தெரிவிக்கையில், “நிதி மந்திரியின் அறிவிப்புகளை கேட்டு நான் சிலிர்த்துப்போனேன். அவர் எடுத்த தைரியமான முடிவுக்கு பாராட்டுகள். முதலீட்டாளர்கள் பெரும் முதலீடுகளை செய்யும் முடிவுக்கு வருவார்கள்” என்று கூறினார்.

“இது 28 ஆண்டுகளில் செய்யப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தம்” என பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜினிஷ் குமார் தெரிவித்தார்.

இந்திய வர்த்தக, தொழில் சபைகளின் கூட்டமைப்பு ‘பிக்கி’யின் தலைவர் சந்தீப் சோமெனி, “பெருநிறுவனங்கள் மீதான வருமான வரியை குறைக்க வேண்டும் என்பது எங்களது நீண்ட கால கோரிக்கை. இது இந்திய தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது” என குறிப்பிட்டார்.