காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்திரா பவன்; டிசம்பர் 28ல் திறப்பு விழா
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகத்திற்கு வருகிற டிசம்பர் 28ந்தேதி திறப்பு விழா நடத்தப்படுகிறது.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் டெல்லியின் மையப்பகுதியான அக்பர் ரோட்டில் கடந்த 1978ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைமையகம் கட்ட ரவுஸ் அவென்யூ பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒதுக்கியது. புதுக்கட்டிடம் கட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அடிக்கல் நாட்டினார். எனினும் புதிய தலைமையகம் கட்டி முடிக்கப்படாத நிலையில், அக்கட்சியின் தலைமையகம் தொடர்ந்து அக்பர் ரோட்டிலே செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டெல்லி ஐ.டி.ஓ. பகுதியில் 150 கோடி ரூபாய் மதிப்பில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் தொடங்கிய கட்டுமான பணிகள், கடந்த ஆண்டே நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், நிதி நெருக்கடியால் பணியில் அவ்வப்போது தொய்வு ஏற்பட்டது. அதுவும் கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை முற்றிலுமாக பணிகள் நிறுத்தப்பட்டன.
இதுபோன்ற காரணங்களால் 3 ஆண்டுகளாக இழுபறியாக இருந்த கட்டுமான பணிகள், தற்போது ஒரு வழியாக நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபன தினமான டிசம்பர் 28ந்தேதியன்று தலைமை அலுவலக கட்டிடம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'இந்திரா பவன்' என பெயர் சூட்டப்பட்டள்ள இந்த கட்டிடம் 6 மாடிகளை கொண்டது. ஆறாவது மாடியில் உள்ள அலுவலகம், சுமார் 21 ஆயிரத்து எட்டு சதுர அடி பரப்பளவில் அதிநவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு 5வது மாடியில் பிரத்யேகமாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய அளவிலான முக்கிய தலைவர்கள் மட்டுமே அந்த தளத்திற்கு சென்று வரும் அளவிற்கு மிகவும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இந்த பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் அடையாளமாக விளங்கப்போகும் தங்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தை வரவேற்க, காங்கிரஸ் கட்சியினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Related Tags :
Next Story