“அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய நீங்கள் அமெரிக்கா செல்லவில்லை” -பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கண்டனம்


“அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய நீங்கள் அமெரிக்கா செல்லவில்லை” -பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கண்டனம்
x
தினத்தந்தி 23 Sep 2019 8:22 AM GMT (Updated: 23 Sep 2019 8:22 AM GMT)

அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய மோடி அமெரிக்கா செல்லவில்லை என பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நலமா மோடி (ஹவுடி மோடி) நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்வாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவு பற்றியும் பயங்கரவாதத்திற்கு  எதிராக இணைந்து போரிடுவதன் முக்கியத்துவம் பற்றியும் பேசினார்.

மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பயங்கரவாதத்தை வேரருப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அடுத்த முறையும் அவரையே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

மோடியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த் சர்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நீங்கள் எங்கள் பிரதமராக தான் அமெரிக்கா சென்றிருக்கிறீர்கள். அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய செல்லவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

தனது இன்னொரு டுவிட்டர் பதிவில், “நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்திய வெளியுறவு கொள்கையின்படி இன்னொரு நாட்டின் தேர்தல் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையை நீங்கள்  மீறிவிட்டீர்கள். இது இந்தியாவின் கொள்கைகளை அவமதிப்பதாகும். நீங்கள் டிரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது இரு நாடுகளின் இறையாண்மை மற்றும் ஜனநாயக விதிகளை மீறும் செயல்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story