காஷ்மீரில் தடுப்பு காவலில் உள்ளோர் 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைப்பு; பா.ஜ.க.


காஷ்மீரில் தடுப்பு காவலில் உள்ளோர் 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைப்பு; பா.ஜ.க.
x
தினத்தந்தி 1 Oct 2019 8:00 AM IST (Updated: 1 Oct 2019 8:00 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் தடுப்பு காவலில் உள்ளோர் 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என பா.ஜ.க. தேசிய செயலாளர் கூறியுள்ளார்.

அவுரங்காபாத்,

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5ந்தேதி ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது. இதனால் காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

காஷ்மீரில் இயல்பு நிலை சீரடைந்த பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.  அரசின் முடிவுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடக்கூடும் என்பதால், முன்னாள் முதல் மந்திரிகள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  எம்.பி.யும் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, பொதுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கு பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ள போதிலும்,  அச்சம் காரணமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மறுக்கின்றனர்.  சந்தைகள் இயங்கவில்லை. பொதுப்போக்குவரத்தும் முடங்கியுள்ளது. வீதிகளில் முக்கிய வணிக வளாகங்கள் மூடிக்கிடக்கின்றன. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்து உள்ளன. தனியார் வாகனங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன.

காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரிகள் உள்பட பலர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.  அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றன.

மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் இதுபற்றி பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் ராம் மாதவ், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்டபொழுது அங்கு 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

ஆனால் தற்பொழுது 200 முதல் 250 பேரே தடுப்பு காவலில் உள்ளனர்.  சட்டம் மற்றும் ஒழுங்கை முன்னிட்டு அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களில் சிலர் 5 நட்சத்திர விருந்தினர் இல்லங்களிலும், சிலர் 5 நட்சத்திர ஓட்டல்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என கூறினார்.

கடந்த 2 மாதங்களாக காஷ்மீரில் அமைதி நிலவி வருகிறது என்றும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.  இதனால் காஷ்மீரின் மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்றும் இந்த 200 முதல் 250 பேர் என்ன விரும்புகிறார்கள் என்றும் நீங்கள் புரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story