கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமாரின் நீதிமன்றக்காவல் நீட்டிப்பு


கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமாரின் நீதிமன்றக்காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2019 3:34 PM IST (Updated: 1 Oct 2019 3:34 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமாரின் நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டவருமான டி.கே.சிவக்குமார் வீடுகளில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் அவரது டெல்லி வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் சிக்கியது.

இதுகுறித்து அமலாக்கத்துறையினர், டி.கே.சிவக்குமார் மீது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ரத்து செய்ய கோரிய அவரது மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சிவக்குமார் கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் ஆஜரானார்.

அவரிடம் 4 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 4-வது நாள் விசாரணையின் முடிவில், அதாவது கடந்த செப்டம்பர் 3-ந் தேதி டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். டி.கே. சிவக்குமார் தரப்பில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.  

இந்த மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, நீதிமன்றக்காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், டி.கே. சிவக்குமாரின் நீதிமன்றக்காவலை வரும் 15 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்.4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் டி.கே. சிவக்குமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

Next Story