அ.தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தி.மு.க. மனு - தலைமை தேர்தல் கமிஷனில் அளிக்கப்பட்டது


அ.தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தி.மு.க. மனு - தலைமை தேர்தல் கமிஷனில் அளிக்கப்பட்டது
x
தினத்தந்தி 2 Oct 2019 4:30 AM IST (Updated: 2 Oct 2019 3:46 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவின் கைரேகை முறைகேடாக பயன்படுத்தப்பட்டதால், அ.தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய செய்யக்கோரி தேர்தல் கமிஷனில் தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது ஜெயலலிதாவின் கைரேகை முறைகேடாக பயன்படுத்தப்பட்டதால், அ.தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனில் தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் சீனிவேல், சட்டசபை உறுப்பினராக பதவியேற்பதற்கு முன்பே காலமானார். இதனைத் தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் மாதம் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஏ.கே.போசும், தி.மு.க. சார்பில் டாக்டர் பி.சரவணனும் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து டாக்டர் சரவணன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். “ஏ.கே.போஸ் போட்டியிடுவதற்கான ஆவணங்களில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்ட நடவடிக்கை முறைகேடானது. எனவே, ஏ.கே.போசின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்” என்று அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி தீர்ப்பு கூறப்பட்டது. ஆவணங்களில் கைரேகை வைத்த விவகாரங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறிய நீதிபதி வேல்முருகன், ‘அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றி செல்லாது’ என்று தீர்ப்பு அளித்தார்.

இதற்கிடையே, இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி ஏ.கே.போஸ் காலமானார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலின்போது நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் டாக்டர் சரவணன், திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் டாக்டர் சரவணன் மற்றும் வக்கீல்கள் அருண், கிருஷ்ணதாஸ் ஆகியோர் நேற்று டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் கமிஷனில் ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில், “சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்த வேண்டும் என்பதே தேர்தல் கமிஷனின் குறிக்கோள். ஜெயலலிதாவின் கைரேகையை பெற்ற விவகாரத்தில் அ.தி.மு.க. கட்சி கடுமையான குற்றத்தை செய்துள்ளது. விதிகளை மீறி இருக்கிறது. வாக்காளர்களை ஏமாற்றி இருக்கிறது. இது தேர்தல் கமிஷன் மீதான நம்பிக்கையை பாதிக்கும் செயலாகும். எனவே, முறைகேடாக செயல்பட்ட அ.தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.


Next Story