ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரத்தின் மனுவை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்


ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரத்தின் மனுவை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 3 Oct 2019 2:48 PM GMT (Updated: 3 Oct 2019 2:55 PM GMT)

ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

புதுடெல்லி, 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முன்னாள் மத்திய நிதி அமைச்சர்  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.   20 நாட்களுக்கும் மேலாக  அவரை காவலில் எடுத்து விசாரித்த சிபிஐ, செப்டம்பர் 5-ம் தேதி ப.சிதம்பரத்தை மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. 

அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க   சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.  14 நாட்கள் நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில் அவர் மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 19-ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 3-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து. 

இந்த நிலையில், இன்று (அக்.3) மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், அக்டோபர் 17 ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்றக்காவலை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், ஜாமீன் கோரி  ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.  முன்னதாக, ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது நினைவு கொள்ளத்தக்கது.


Next Story