நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழைக்கு 1,900 பேர் சாவு


நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழைக்கு 1,900 பேர் சாவு
x
தினத்தந்தி 5 Oct 2019 2:41 AM IST (Updated: 5 Oct 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழைக்கு சுமார் 1,900 பேர் பலியானதாகவும், 1 லட்சம் வீடுகள் சேதமடைந்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

புதுடெல்லி,

கேரளாவில் கடந்த ஜூன் 8-ந்தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை படிப்படியாக தீவிரமடைந்தது. நாடு முழுவதும் பரவலாக பெய்த இந்த மழை கடந்த 30-ந் தேதியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. எனினும் சில பகுதிகளில் இன்னும் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக தென்மேற்கு பருவமழை பெய்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. குறிப்பாக கடந்த 1994-ம் ஆண்டுக்குப்பின் முதல் முறையாக அதிக மழை கிடைத்திருப்பதாகவும், இது இயல்பான அளவுக்கு மேல் என வகைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை அதிக சேதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அந்தவகையில் கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட சம்பவங்களில் 1,874 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 738 பேர் காயமடைந்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் 46 பேர் மாயமாகி உள்ளனர். இதைப்போல 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்தன.

இந்த மழை வெள்ளத்தால் 1.09 லட்சம் வீடுகள் முற்றிலும் இடிந்ததாகவும், 2.05 லட்சம் வீடுகள் பாதியளவு சேதமடைந்திருப்பதாகவும் கூறியுள்ள உள்துறை அமைச்சகம், 14.14 லட்சம் ஹெக்டேர் பயிர்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறியுள்ளது.

இந்த மழை சேதத்தில் அதிக அளவாக மராட்டியத்தில் 382 பேர் பலியாகி இருக்கின்றனர். அடுத்ததாக மேற்கு வங்காளத்தில் 227 பேரும், மத்திய பிரதேசத்தில் 182 பேரும், கேரளாவில் 181 பேரும், குஜராத்தில் 169 பேரும் உயிரிழந்து உள்ளனர். 4 மாதங்கள் நீடித்த இந்த தென்மேற்கு பருவமழையில் நாடு முழுவதும் 357 மாவட்டங்கள் வெள்ள பாதிப்பை அடைந்ததாக மத்திய அரசு கூறியுள்ளது.


Next Story