2022-ம் ஆண்டுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதே இலக்கு - மத்திய அரசு தகவல்


2022-ம் ஆண்டுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதே இலக்கு - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 5 Oct 2019 3:45 AM IST (Updated: 5 Oct 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

2022-ம் ஆண்டுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதே இலக்கு என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய தகவல், ஒளிபரப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், தூய்மை இந்தியா திட்டத்தின் 2-ம் பாகம் குறித்து பேசினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் பாகத்தில் 10 கோடி கழிவறைகள் கட்டுவதே இலக்காக இருந்தது. இந்த இலக்கு எட்டப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டத்தின் 2-ம் பாகமாக பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டம் எடுக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் 2022-ம் ஆண்டுக்குள், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை நாட்டில் இருந்து ஒழிப்பதே இலக்காகும்’ என்று கூறினார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்ததினத்தில் இருந்து இந்த மாபெரும் இயக்கம் தொடங்கப்பட்டு இருப்பதாக கூறிய ஜவடேகர், அடுத்த 3 ஆண்டுகளில் இது தொடர்பாக மாபெரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் 500 தேசிய பூங்காக்கள், வன காப்பகங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

போலி செய்திகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜவடேகர், பணம் கொடுத்து வெளியிடப்படும் செய்திகளை விட, போலி செய்திகள் அதிக ஆபத்தானவை என்றும், அரசும், ஊடகங்களும் இணைந்து இதை எதிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story