தீபாவளிக்கு பசுமை பட்டாசுகள் - டெல்லியில் மத்திய மந்திரி அறிமுகப்படுத்தினார்


தீபாவளிக்கு பசுமை பட்டாசுகள் - டெல்லியில் மத்திய மந்திரி அறிமுகப்படுத்தினார்
x
தினத்தந்தி 6 Oct 2019 4:45 AM IST (Updated: 6 Oct 2019 4:12 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளியையொட்டி, டெல்லியில் நேற்று பசுமை பட்டாசுகளை மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் அறிமுகப்படுத்தினார்.

புதுடெல்லி,

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கேட்டு, மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜுன் கோபால் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை 2 மணி நேரமாகவும், புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை தினங்களில் 40 நிமிடங்களாகவும் குறைத்தது.

மேலும் பேரியம் உப்பு, சல்பர் போன்ற அதிக சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் இல்லாமல் பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், பசுமை பட்டாசுகளை தயாரிப்பதற்காக இந்திய அளவில் பிரபலமான சில பட்டாசு ஆலைகளுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

இதைத் தொடர்ந்து, பசுமை பட்டாசுகள் தயாரிப்பதற்கான ஆய்வுகளை தொழில்துறை ஆராய்ச்சிக்கான அறிவியல் கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) 8 ஆய்வகங்களில் மேற்கொண்டது. கடந்த 6 மாதங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வை தொடர்ந்து பேரியம் உப்பு இன்றி சில பட்டாசு வகைகள் தயாரிக்கப்பட்டன.

இந்த பசுமை பட்டாசுகளை அறிமுகம் செய்வதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு டெல்லியில் உள்ள தொழில்துறை ஆராய்ச்சிக்கான அறிவியல் கவுன்சில் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரம், குடும்ப நலன், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ஹர்ஷவர்தன் கலந்து கொண்டு பசுமை பட்டாசுகளை அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:

தொழில்துறை ஆராய்ச்சிக்கான அறிவியல் கவுன்சில், புதிய சூத்திரங்களின் அடிப்படையில் ஒளி உமிழும் பட்டாசுகள், பென்சில்கள், சக்கரங்கள் மற்றும் மத்தாப்பூ உள்ளிட்ட பட்டாசுகளை தயாரித்து உள்ளது. இதற்காக அந்த கவுன்சில் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டுகிறேன்.

பசுமை பட்டாசுகளை தயாரிப்பதற்காக இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 230 பட்டாசு உற்பத்தியாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளன.

இந்த தீபாவளியை கொண்டாட பசுமை பட்டாசுகள் தயார். எனவே, பொதுமக்கள் பசுமை பட்டாசுகளையே வெடிக்க வேண்டும். இந்த பசுமை பட்டாசுகள் மூலம் 30 சதவீதம் மாசு குறையும். பசுமை பட்டாசுகளில் அவை பசுமை பட்டாசுகள் என்பதற்கான அடையாளம் மற்றும் சான்றிதழ் இருக்கும். இதைத்தான் விற்கவும், வாங்கி வெடிக்கவும் முடியும். இவ்வாறு ஹர்ஷவர்தன் கூறினார்.

பேட்டியின்போது தொழில்துறை ஆராய்ச்சிக்கான அறிவியல் கவுன்சிலின் இயக்குனர் சேகர் சி.மாண்டே, ‘நீரி’ அமைப்பின் இயக்குனர் ராகேஷ் குமார் மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சிலர் உடன் இருந்தனர்.

அப்போது அங்கிருந்த சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்க நிர்வாகி பாலாஜி கூறுகையில், “பட்டாசு வெடிப்பதற்கு டெல்லியில் உள்ள தடையை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு வருகிற 22-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அதன் பிறகே மற்ற மாநிலங்களுக்கும் தடை விரிவுபடுத்தப்படுமா? இல்லையா? என்பது தெரிய வரும். நாடு முழுவதும் தடை நீட்டிக்கப்பட்டால் சிவகாசி உற்பத்தியாளர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். பசுமை பட்டாசுதான் விற்க வேண்டும் என்பதால் இந்த ஆண்டு பட்டாசு தொழிலில் ரூ.3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்” என்றார்.


Next Story