ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை அடைய ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் உதவும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு


ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை அடைய ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் உதவும் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு
x
தினத்தந்தி 6 Oct 2019 5:00 AM IST (Updated: 6 Oct 2019 4:20 AM IST)
t-max-icont-min-icon

ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை அடைவதற்கு ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் உதவும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

ரூர்கி,

உத்தரகாண்ட் மாநிலம், ரூர்கியில் அமைந்துள்ள 172 ஆண்டு கால பழமையான இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (ஐ.ஐ.டி.) பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பட்டமளிப்பு உரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூர்கி ஐ.ஐ.டி. போன்றவை வெறும் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல. இவையெல்லாம் கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாக்க கருத்துகளின் மையங்கள் ஆகும்.

இவற்றின் ஆராய்ச்சியும், கண்டுபிடிப்புகளும், ஆக்கப்பூர்வமான யோசனைகளும் நமது நாடு இலக்குகளை அடைய உதவும். அது மட்டுமல்ல மனிதகுலம் இன்று எதிர்கொள்ளும் பெரிய கவலைகளையும் நிவர்த்தி செய்யும்.

புதுமையையும், படைப்பாற்றலையும் நாம் வளர்க்க வேண்டும். அதை இந்த ரூர்கி ஐ.ஐ.டி. செய்கிறது என்பதை அறிந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கல்வி அமைப்புகளிலும், முடிவு எடுப்பதிலும் மாணவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதின் மூலமும் இந்த வளாகத்தில் ஆக்கப்பூர்வமான சிந்தனை ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள ஆராய்ச்சியாளர்கள், நமது சக மக்களின் நலன்களுக்கான பங்களிப்பை செய்யக்கூடிய தொழில்நுட்பங்கள், தயாரிப்புகளில் பணியாற்றி வருகிறார்கள். இவற்றில் நானோ தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, கம்ப்யூட்டர், உயிரி பொருட்கள் போன்ற அதிநவீன துறைகளும் அடங்கும்.

ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவர்கள், தாங்கள் கற்ற இந்த கல்வி நிறுவனத்துக்கு தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும். ஏனெனில் அவர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் பெற்ற அதிர்ஷ்டசாலிகள். அவர்களுக்கு வரி செலுத்துவோர், அதாவது இந்த நாடு நிதி அளித்திருக்கிறது. அவர்கள் அதை தாங்கள் விரும்புகிற வகையில் திருப்பி செலுத்தவேண்டிய தார்மீகக்கடமை உண்டு.

2025-ம் ஆண்டுக்குள், 5 லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார நாடு என்ற இலக்கை நாம் அடைவதற்கு ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, படைப்பாற்றல் யோசனைகள் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story