பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு 18 மாதம் சிறை தண்டனை


பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு 18 மாதம் சிறை தண்டனை
x
தினத்தந்தி 9 Oct 2019 9:31 PM GMT (Updated: 9 Oct 2019 9:31 PM GMT)

பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் நிஜித்பூரை சேர்ந்தவர், துல்லு மக்தோ. இவர் பா.ஜனதா சார்பில் பக்மாரா தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகாமையில் ராஜேஷ் குப்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது ஒரு வழக்கு சம்பந்தமாக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் பரோரா போலீசார் ராஜேஷ் குப்தாவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

துல்லு மக்தோ மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் பரோரா காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் தகராறு செய்து ராஜேஷ் குப்தாவை அங்கு இருந்து மீட்டு, வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்த தகராறில் இன்ஸ்பெக்டர் சட்டை கிழிந்தது. இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் ஆர்.என்.சவுத்திரி, பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் போலீசாரை தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் துல்லு மக்தோ மீது வழக்குப்பதிவு செய்தார்.

இந்த வழக்கு விசாரணை மாஜிஸ்திரேட்டு சிக்கா அகர்வால் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த அவர், துல்லு மக்தோ எம்.எல்.ஏ.வுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இருந்தாலும் இந்த தண்டனையால் அவர் எம்.எல்.ஏ.வாக நீடிக்கவோ அல்லது தேர்தலில் போட்டியிடவோ தடை ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story