வட இந்தியாவில் மாசு அதிகரிப்பதற்கான காரணத்தை விளக்கும் நாசாவின் புகைப்படங்கள்


வட இந்தியாவில் மாசு அதிகரிப்பதற்கான காரணத்தை விளக்கும்  நாசாவின் புகைப்படங்கள்
x
தினத்தந்தி 14 Oct 2019 3:28 PM IST (Updated: 14 Oct 2019 3:28 PM IST)
t-max-icont-min-icon

வட இந்தியா முழுவதும் காற்றில் மாசுபாடு மிகவும் மோசமடைந்து வருவதற்கான காரணத்தை நாசாவின் விண்வெளிப் புகைப்படம் வெளிப்படுத்தியுள்ளது.

புதுடெல்லி

டெல்லியில் இன்று காலை  அதிகப்படியான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. தலைநகரைச் சுற்றியுள்ள ஜஹாகிபுரி, பஞ்சாபி பாக் மற்றும் வசிர்பூர் பகுதிகளிலும் காற்று அதிகப்படியாக மாசடைந்துள்ளது. காற்றின் தரத்தை அறிய உதவும் குறியீட்டில் மிதமான மாசுபாடிலிருந்து மிகவும் மோசமான மாசுபாடு என்ற நிலைக்கு வட இந்திய மாநிலங்களின் காற்றின் தரம் குறைந்து உள்ளது.

டெல்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் 301 புள்ளியைத் தொட்டு உள்ளது.

0 முதல் 50 க்கு இடையில் உள்ள காற்றின் தரக் குறியீடு 'நல்லது', என்றும் 51 முதல்  100 காற்றின் தரக் குறியீடு  'திருப்திகரமானது என்றும், 101 முதல்  200 'மிதமான' காற்றின் தரக் குறியீடு என்றும் 201 மற்றும் 300  மோசமான காற்றின் தரக் குறியீடு என்றும், 301 முதல்  400 காற்றின் தரக் குறியீடு 'மிகவும் மோசமானது என்றும், 401 முதல்  500 காற்றின் தரக் குறியீடு 'மிக மிக மோசமானது' என்று கருதப்படுகிறது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தரவுகளின்படி, ஆனந்த் விஹார், வஜீர்பூர், விவேக் விஹார், முண்ட்கா, பவானா, ஜஹாங்கிர்புரி ஆகிய இடங்களில்  முறையே 327, 323, 317, 309, 302 மற்றும் 300 ஆக இருந்தது.

அண்டை மாநில மாந்ன உத்தரபிரதேசம் காசியாபாத் (320), கிரேட்டர் நொய்டா (312,) நொய்டா (310) மற்றும் அரியானா மாநிலம் அலிபூர் கல்சா (351) மற்றும் பானிபட் (339) ஆகியவற்றில் காற்றின் தரமும் "மிகவும் மோசமாக" மாறியது.

இதற்கான முக்கியக் காரணமே அதிக நெருப்புப்புகை ஏற்பட்டிருப்பதால் மட்டுமே என விளக்குகிறது நாசா வெளியிட்டுள்ள புகைப்படம். பல விவசாய நிலங்கள் எரிந்து வருவதன் காரணத்தாலே வட இந்திய மாநிலங்களில்  காற்றின் தரம் வீழ்ந்துள்ளதற்கான காரணமாக விளக்கப்படுகிறது. தசரா பண்டிகை சமயம் என்பதாலும் கடந்த ஐந்து நாட்களாக காற்று மாசுபாடு மிகவும் அதிகரித்துள்ளதாக அந்த விண்வெளிப் புகைப்படம் விளக்குகிறது.

வட இந்தியா மட்டுமல்லாது பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளது. மற்றபடி வட கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் இப்பிரச்சினை இல்லை என்றே மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் கூறப்படுகிறது. தலைநகர் டெல்லியின் மாசுக்குக் காரணமே அரியானாவில் எரியும் வயல்கள்தான் என்றுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அண்டை மாநிலங்கள் பயிர் எரிப்பதை நிறுத்தாவிட்டால் மாசு கட்டுப்பாட்டை எதிர்த்து இதுவரை அடைந்த  நடவடிக்கைகளும் பயனற்றுபோகும் என்று கூறி உள்ளார்.

Next Story