பணப்புழக்கத்தை அதிகரிக்க 9 நாட்களில் ரூ.81,781 கோடி வங்கி கடன் - மத்திய நிதி அமைச்சகம் தகவல்


பணப்புழக்கத்தை அதிகரிக்க 9 நாட்களில் ரூ.81,781 கோடி வங்கி கடன் - மத்திய நிதி அமைச்சகம் தகவல்
x
தினத்தந்தி 14 Oct 2019 3:51 PM IST (Updated: 15 Oct 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், வங்கிகள் மூலம் 9 நாட்களில் ரூ.81,781 கோடி கடன் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலையால் மோட்டார் வாகன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து தொழில்துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து உள்ளது.

விரைவில் தீபாவளி கொண்டாடப்பட இருப்பதால், பண்டிகை காலத்தையொட்டி, பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் நாடு முழுவதும் வங்கிகள் மூலம் சிறுதொழில் செய்வோர் மற்றும் வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்படும் என்று சமீபத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

அதன்படி, கடந்த 1-ந் தேதி முதல் 9 நாட்களில் நாடு முழுவதும் வங்கிகள் நடத்திய கடன் வழங்கும் நிகழ்ச்சிகள் மூலம் ரூ.81 ஆயிரத்து 781 கோடி கடன்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், இதில் புதியதாக வழங்கப்பட்ட கடன்கள் மட்டும் ரூ.34 ஆயிரத்து 342 கோடி என்றும் மத்திய நிதித்துறை அமைச்சக செயலாளர் ராஜீவ் குமார் நேற்று தெரிவித்தார்.

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில், வங்கிகளிடம் போதிய நிதி கையிருப்பு உள்ளதாகவும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பெரு நிறுவனங்கள் வழங்க வேண்டிய பாக்கித்தொகையை தீபாவளிக்கு முன் வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பெரு நிறுவனங்கள் வைத்துள்ள பாக்கி தொகை மீது பில் தள்ளுபடி வசதி வழங்குமாறு வங்கிகளை கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக டெல்லியில் பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

Next Story