இந்திய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய வழக்கு; 6 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு
காஷ்மீரில் கடந்த பிப்ரவரியில் மி-17 ரக இந்திய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய வழக்கில் 6 இந்திய விமான படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவாகி உள்ளது.
புதுடெல்லி,
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையை சேர்ந்த 40 பேர் பலியாகினர்.
இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26ந்தேதி பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்த ஜெய்ஷ் இ முகமது இயக்க முகாம்கள் மீது இந்திய விமான படை குண்டுகளை வீசி தாக்கி அழித்தது. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்தியாவுக்குள் கடந்த பிப்ரவரி 27ந்தேதி ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் விமான படையினர் தடுத்து நிறுத்தப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்களது எப் 16 ரக ஜெட் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்திய தரப்பில் இருந்து விரட்டி சென்றதில் விமானம் ஒன்று ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விழுந்தது. இதில் அபிநந்தன் என்ற இந்திய விமானி பாகிஸ்தானிடம் சிக்கினார். இதன்பின் சர்வதேச அழுத்தம் மற்றும் இந்தியாவின் தீவிர முயற்சியினால் அவர் விடுவிக்கப்பட்டு இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டார்.
இதனிடையே, ஸ்ரீநகர் அருகே புத்காம் பகுதியில் கடந்த பிப்ரவரி 27ந்தேதி மி-27 ரக ஹெலிகாப்டர் ஒன்றை பாகிஸ்தான் நாட்டு ஹெலிகாப்டர் என தவறாக நினைத்து இந்திய தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தி சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 6 இந்திய விமான படை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஹெலிகாப்டர் தரையில் வீழ்ந்ததில் பொதுமக்களில் ஒருவர் பலியானார்.
இந்த வழக்கில் இந்திய விமான படையை சேர்ந்த 6 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 2 பேர் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளவும், மற்ற 4 பேர் மீது நிர்வாக அடிப்படையிலான நடவடிக்கை எடுக்கவும் முடிவாகி உள்ளது.
Related Tags :
Next Story