தேசிய செய்திகள்

ப.சிதம்பரத்தை கைது செய்ய அனுமதி கோரும் அமலாக்கத்துறை மனு மீது தனிக்கோர்ட்டு இன்று உத்தரவு + "||" + Enforcement department to seek permission to arrest PC Chidambaram Today

ப.சிதம்பரத்தை கைது செய்ய அனுமதி கோரும் அமலாக்கத்துறை மனு மீது தனிக்கோர்ட்டு இன்று உத்தரவு

ப.சிதம்பரத்தை கைது செய்ய அனுமதி கோரும் அமலாக்கத்துறை மனு மீது தனிக்கோர்ட்டு இன்று உத்தரவு
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் அமலாக்கத்துறையின் மனு மீது தனிக்கோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், செப்டம்பர் 5-ந் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது நீதிமன்ற காவலை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு வருகிற 17-ந் தேதி வரை நீட்டித்து உள்ளது.


இதற்கிடையே ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் நடைபெற்ற பண பரிவர்த்தனை தொடர்பாக ப.சிதம்பரத்தை கைது செய்து தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தனிக்கோர்ட்டில் அமலாக்கத்துறை கடந்த 11-ந் தேதி தாக்கல் செய்த மனு நீதிபதி அஜய்குமார் குஹர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதையொட்டி, ப.சிதம்பரம் தனிக்கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.

விசாரணை தொடங்கியதும் அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், சுப்ரீம் கோர்ட்டு ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளது என்றும், எனவே அவரை கைது செய்து அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்து இருப்பதாகவும் கூறினார்.

இதற்கு, ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் வாதாடுகையில், இந்த வழக்கில் அமலாக்கத்துறை கடைப்பிடிக்கும் நடைமுறை மிகவும் ஆட்சேபணைக்கு உரியது என்றும் சட்டத்தின் அடிப்படையில் ப.சிதம்பரத்தை கைது செய்து காவலில் வைக்க முடியாது என்றும், ஏற்கனவே 15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் சி.பி.ஐ. விசாரித்த அதே பரிமாற்றம் தொடர்பாக இப்போது அவரை கைது செய்ய சட்டத்தில் இடமில்லை என்றும் கூறினார். அத்துடன், அமலாக்கத்துறையின் மனுவை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு எதிராக வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சட்டவிரோத பணபரிமாற்றம் என்பது தனியான குற்றம் என்றும், இந்த குற்றத்தில் பணம் பாய்ந்துள்ள பாதைகளை சி.பி.ஐ. புலனாய்வு செய்ய முடியாது என்றும் அமலாக்கத்துறைதான் செய்ய முடியும் என்றும், எனவே அவரை கைது செய்து 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய் குமார் குஹர், அமலாக்கத்துறை மனு மீதான உத்தரவு இன்று (செவ்வாய்க்கிழமை) பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.

விசாரணையின் போது ப.சிதம்பரத்தின் மனைவியும் மூத்த வக்கீலுமான நளினி சிதம்பரம், அவருடைய மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் சிலர் கோர்ட்டில் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து இருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ப.சிதம்பரம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் - டெல்லி ஐகோர்ட்டில் கபில்சிபல் வாதம்
அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தது. அப்போது அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் என அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் கபில் சிபில் கூறினார்.
2. நன்றாக இருப்பதால் ப.சிதம்பரத்தை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க தேவை இல்லை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
ப.சிதம்பரம் நன்றாக இருப்பதால் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்க தேவை இல்லை என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
3. சிகிச்சை பெறுவதற்காக 3 நாள் இடைக்கால ஜாமீன் கேட்ட ப.சிதம்பரத்தின் கோரிக்கை நிராகரிப்பு
சிகிச்சை பெறுவதற்காக 3 நாள் இடைக்கால ஜாமீன் கேட்ட ப.சிதம்பரத்தின் கோரிக்கையை டெல்லி ஐகோர்ட் நிராகரித்தது.
4. ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தை 24-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி; தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவு
ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை வருகிற 24-ந் தேதி வரை 14 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க தனிக்கோர்ட்டு நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
5. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரம் மீண்டும் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறை எடுத்தது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஒரு வழக்காக ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு மாறி உள்ளது.