‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார்; தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு


‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார்; தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 16 Oct 2019 4:45 AM IST (Updated: 16 Oct 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.

சண்டிகார்,

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம், ‘டங்கல்‘’ என்ற இந்திப்படம் வெளியானது. அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மகாவீர்சிங் போகத் என்ற முன்னாள் மல்யுத்த வீரர், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற தனது கனவை தன்னுடைய மகள்கள் மூலமாக நிறைவேற்றுவதுதான் இந்த படத்தின் கதை.

இதற்காக, சமூக கட்டுப்பாடுகளை மீறி, அவர் தன்னுடைய இரு மகள்களுக்கும் மல்யுத்த பயிற்சி அளிப்பதாக கதை அமைந்துள்ளது. அரியானா மாநில மல்யுத்த வீராங்கனை பபிதா போகத், அவருடைய தந்தை மகாவீர்சிங் போகத் ஆகியோரது வாழ்க்கை அனுபவங்கள் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்பட்டது.

தந்தை வேடத்தில் அமீர்கான் நடித்திருந்தார். அவரே தயாரித்து இருந்தார். இந்த படம் சீனா உள்பட உலகம் முழுவதும் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. பல்வேறு விருதுகளையும் பெற்றது.

இந்த கதையின் நிஜ முகங்களாக திகழும் பபிதா போகத், மகாவீர்சிங் போகத் ஆகியோர் சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்தனர். அவர்களில், பபிதா போகத், அரியானா சட்டசபை தேர்தலில் தாத்ரி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

நேற்று அந்த தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பபிதா போகத்தை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அப்போது, ‘டங்கல்’ படம் பற்றி அவர் குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:-

சமீபத்தில், தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்தேன். ‘டங்கல்’ படம் பார்த்ததாக அப்போது அவர் என்னிடம் கூறினார். அது எனக்கு பெருமையாக இருந்தது.

அரியானாவில் உள்ள பெண் குழந்தைகள், திறமைசாலிகளாக உள்ளனர். அவர்கள், பையன்களுக்கு சளைத்தவர்கள் அல்ல. அரியானா மாநில கிராமங்களின் ஆதரவு இல்லாமல் ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’ திட்டம் வெற்றி பெற்றிருக் காது.

காங்கிரஸ் தலைவர் கள் 370-வது பிரிவு குறித்து வதந்திகளை பரப்பி வருகிறார்கள். ஆனால், அரியானா மக்கள், தூய்மையான, வெளிப்படையான பா.ஜனதா அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முடிவு செய்து விட்டார்கள்.

இவ்வாறு மோடி பேசினார்.

Next Story