இந்திய எல்லைப் பகுதியில் மீண்டும் பறந்த பாகிஸ்தான் ஆள் இல்லா விமானம்


இந்திய எல்லைப் பகுதியில் மீண்டும் பறந்த பாகிஸ்தான் ஆள் இல்லா விமானம்
x
தினத்தந்தி 16 Oct 2019 11:34 AM IST (Updated: 16 Oct 2019 1:53 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் பஞ்சாப் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் ஆள் இல்லா விமானம் மீண்டும் பறந்து உள்ளது.

சண்டிகர்

கடந்த ஒரு வாரத்திற்கு முன் பஞ்சாபின் ஃபெரோஸ்பூருக்கு அருகே ஒரு ஆள் இல்லா விமானம் காணப்பட்டது. ஒரு வாரத்திற்குப் பிறகு, பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு ஆள் இல்லா விமானத்தை பஞ்சாபின் எல்லைக்கு அருகில் வசிக்கும் கிராம மக்கள் கண்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு பாகிஸ்தானின் ஆள் இல்லா விமானம் ஒன்று  இந்தியா-பாகிஸ்தான் எல்லை கிராமங்களான ஹசாரா சிங் வாலா மற்றும் பக்டி ஆகிய இரு கிராமங்களில் பறந்து கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நேரில் பார்த்த உள்ளூர்வாசிகள் கூறும்போது, ஆள் இல்லா விமானம்  பாகிஸ்தான் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் வரை இந்திய வான் வெளியில் நுழைந்தது. ஆள் இல்லா விமானம் எல்லை பாதுகாப்பு படை  கோபுரத்திற்கு அருகிலும், சட்லெஜ் நெல் வயல்களிலும் பறந்து  கொண்டிருந்தது. பின்னர் அது எல்லையைத் தாண்டியது, மீண்டும் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறினர்.

போலீசாரும், எல்லை பாதுகாப்பு படையினரும் தேடுதல் நடவடிக்கையைத்  நடத்தினாலும் அந்த ஆள் இல்லா விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. எந்தவொரு பாகிஸ்தான் ஆள் இல்லா விமானமும் இந்திய வான்வெளியில் பறந்தால் சுடப்படும் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர்.

Next Story