காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி...! சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்


காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி...! சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்
x
தினத்தந்தி 19 Oct 2019 5:05 AM GMT (Updated: 19 Oct 2019 5:05 AM GMT)

காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி வைத்ததற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் காவேரி (மாவட்டம்) டவுன் நிசர்கதாபா ரோட்டில் உள்ளது, பகத் பி.யூ. கல்லூரி. தனியாருக்கு சொந்தமான இந்த கல்லூரியில்  மாணவர்கள் காப்பியடிக்காமல் இருக்க   நூதன முறை பின்பற்றப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் இந்த கல்லூரியில் தேர்வு நடந்தது. அப்போது மாணவ-மாணவிகள் காப்பி அடிப்பதையும், அருகில் உள்ளவர்களை பார்த்து எழுதுவதை தடுக்கவும், தேர்வு எழுதிய அனைவரின் தலையில் அட்டைப்பெட்டியை ஹெல்மெட் போல்  அணிவித்து உள்ளனர்.  அந்த வினாத்தாளை பார்த்து விடைத்தாளில் எழுதுவதற்கு வசதியாக அட்டைப்பெட்டியில் இரு துளைகள் இடப்பட்டு இருந்தது. அதன் வழியாக மாணவர்கள் வினாத்தாளை பார்த்து, விடைத்தாளில் எழுதினர்.

மாணவ-மாணவிகள் நூதன முறையில் தேர்வு எழுதிய புகைப்படத்தை யாரோ ஒருவர் செல்போனில் படம் எடுத்து, டுவிட்டர், வாட்ஸ்-அப், பேஸ்புக் (முகநூல்) உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அந்த பி.யூ. கல்லூரி நிர்வாகம் கூறுகையில், தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க இது ஒரு நூதன முயற்சியாகும். சோதனை அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது வெற்றி பெற்றால், இந்த முறையை அனைத்து தேர்வுகளிலும் அமல்படுத்துவோம் என்று கூறியுள்ளது.

காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்கள் தலையில் அட்டைப்பெட்டி வைத்ததற்கு  சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Next Story