மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது


மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது
x
தினத்தந்தி 19 Oct 2019 6:17 PM GMT (Updated: 19 Oct 2019 6:17 PM GMT)

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

புதுடெல்லி,

மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 21ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் ஆளும் பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து களம் காணும் நிலையில், பிரதான எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கைகோர்த்து தேர்தலை சந்திக்கின்றன.

இதேபோல் 90 தொகுதிகளைக் கொண்ட அரியானாவிலும் 21ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் கட்சியான பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அரியானா மாநிலம் சிர்சா, ரேவாரி ஆகிய இடங்களில் பிரதமர் மோடி, பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

மகாராஷ்டிராவின் சதாரா தொகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தவாறு தொண்டர்களிடையே உரையாற்றினார்.

இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்ததைத் தொடர்ந்து வரும் 21ந் தேதி வாக்குப்பதிவும், வரும் 24ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

Next Story