“தவறான கொள்கையால் நாட்டை சீரழித்து விட்டது” - காங்கிரஸ் மீது மோடி கடும் தாக்கு


“தவறான கொள்கையால் நாட்டை சீரழித்து விட்டது” - காங்கிரஸ் மீது மோடி கடும் தாக்கு
x
தினத்தந்தி 20 Oct 2019 5:00 AM IST (Updated: 20 Oct 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

அரியானா சட்டசபை தேர்தலில் இறுதிக்கட்ட பிரசாரத்தின் போது, தவறான கொள்கையால் காங்கிரஸ் நாட்டை சீரழித்து விட்டதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

சண்டிகார்,

அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி காங்கிரசை கடுமையாக தாக்கினார். தவறான கொள்கையால் அந்த கட்சி நாட்டை சீரழித்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

90 உறுப்பினர்களை கொண்ட அரியானா மாநில சட்டசபைக்கு நாளை (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. கடைசி நாளான நேற்று பிரதமர் மோடி சிர்சா, ரெவாரி ஆகிய இடங்களில் பாரதீய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். சிர்சாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசுகையில் காங்கிரஸ் கட்சியை அவர் கடுமையாக தாக்கினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:-

காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் சுமார் 70 ஆண்டுகளாக பல்வேறு துயரங்களை அனுபவித்து வந்தனர். காஷ்மீர் மக்களை பாதுகாக்க அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர்.

அங்கு வெவ்வேறு சாதி, இனத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் நீண்ட காலமாக அம்பேத்கரின் அரசியல் சாசனத்தில் இருந்து வெளியே தள்ளப்பட்டு இருந்தனர். ஆனால் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்ததும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் இந்த அநீதி விலக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் போராடி வருகின்றன. நாட்டு மக்களின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒருபோதும் மதித்ததில்லை. தனது தவறான கொள்கைகளால் காங்கிரஸ் கட்சி நாட்டையே சீரழித்து விட்டது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ஒரு தற்காலிக வழிமுறைதான். ஆனால் 70 ஆண்டுகளாக அது தொடர்பாக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. ஆனால் இந்த தற்காலிக வழிமுறையை நான் முடிவுக்கு கொண்டு வந்தேன். நீங்கள் என்னை 5 ஆண்டுகளுக்கு நிரந்தரமாக்கியிருக்கும்போது, இந்த தற்காலிக நடைமுறையை நான் ஏன் அனுமதிக்க வேண்டும்?

தேச பிரிவினையின்போது கர்தார்பூர் சாகிப் குருத்வாராவை இந்திய பகுதிக்குள் கொண்டுவர முடியாதது ஒரு மிகப்பெரிய தவறு. அதன் காரணமாக சுமார் 70 ஆண்டுகளாக அந்த குருத்வாராவை இந்திய சீக்கியர்கள் பைனாகுலர் மூலம்தான் தரிசிக்க வேண்டி இருந்தது. ஆனால் அங்கேயே சென்று வழிபடுவதற்கான நடவடிக்கையை பாரதீய ஜனதா அரசு மேற்கொண்டு உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இதேபோல் ரெவாரியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மோடி, நாட்டுக்காக உயிர்நீத்த போலீசார், ராணுவ வீரர்களுக்கு காங்கிரஸ் கட்சி எந்த நினைவுச் சின்னத்தையும் எழுப்பவில்லை எனவும், பாரதீய ஜனதா அரசு மட்டுமே அந்த சின்னங்களை கட்டியதாகவும் தெரிவித்தார்.

தனது அரசு செயல்படுத்திய ‘ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தில் அரியானாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மட்டுமே ரூ.900 கோடி செலவழிக்கப்படுவதாகவும் அப்போது அவர் கூறினார்.


Next Story