5வதும் பெண் குழந்தை பெற்ற பெண்ணுக்கு தொலைபேசியில் முத்தலாக் கூறிய கணவர்


5வதும் பெண் குழந்தை பெற்ற பெண்ணுக்கு தொலைபேசியில் முத்தலாக் கூறிய கணவர்
x
தினத்தந்தி 20 Oct 2019 8:48 AM IST (Updated: 20 Oct 2019 8:48 AM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் 5வதும் பெண் குழந்தை பெற்ற பெண்ணுக்கு தொலைபேசி வழியே அவரது கணவர் முத்தலாக் கூறி உள்ளார்.

சம்பல்,

திருமணமான முஸ்லிம் ஆண், தன்னுடைய மனைவியை மூன்று தடவை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை நிலவி வந்தது. சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்பேரில், முத்தலாக்கை தடை செய்ய கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மத்திய அரசு மசோதா கொண்டு வந்தது.

ஆனால், மக்களவையில் நிறைவேறியபோதிலும், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறவில்லை. இருப்பினும், முத்தலாக்கை தடை செய்து கடந்த பிப்ரவரி 21ந்தேதி அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

மீண்டும் ஆட்சியை பிடித்தநிலையில், முத்தலாக் மசோதாவை மோடி அரசு மீண்டும் கொண்டு வந்தது. கடந்த ஜூலை 25ந்தேதி, மக்களவையில் அந்த மசோதா நிறைவேறியது.

கடந்த ஜூலை 30ந்தேதி, மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அன்று இரவு நடந்த வாக்கெடுப்பில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் சிலர் சபைக்கு வரவில்லை. வேறு சிலர் வெளிநடப்பு செய்தனர். இதனால், மசோதாவுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் விழுந்தன. அங்கும் மசோதா நிறைவேறியது.

இரு அவைகளிலும் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியதை தொடர்ந்து, ஜனாதிபதி ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். அதனால், மசோதா, சட்டம் ஆகியுள்ளது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் முடிவுக்கு வந்து, அதற்கு பதிலாக இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து, அரசிதழில் மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதில், ஜனாதிபதி ஒப்புதல் அளித்த தகவல் இடம்பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் 3 தடவை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்வது செல்லாது, சட்ட விரோதமானது என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.  இதனை மீறி செயல்படும் ஆணுக்கு 3 ஆண்டுகள்வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

இதனிடையே, உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் சமீபத்தில் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.  இதனால் அவரது கணவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு முத்தலாக் கூறியுள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் அந்த பெண் கூறும்பொழுது, கடந்த 11 வருடங்களுக்கு முன் கமீல் என்பவருடன் எனக்கு திருமணம் நடந்தது.  எனக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.  சமீபத்தில் 5வது முறையாக எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இந்த செய்தியை அறிந்த எனது கணவர் எனக்கு முத்தலாக் கொடுத்து விட்டார் என்று வருத்தமுடன் தெரிவித்து உள்ளார்.

Next Story