ஆட்சி அமைவதில் இழுபறி: மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியா? - பா.ஜனதா மந்திரி தகவலால் பரபரப்பு


ஆட்சி அமைவதில் இழுபறி: மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியா? - பா.ஜனதா மந்திரி தகவலால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Nov 2019 10:20 AM GMT (Updated: 1 Nov 2019 7:52 PM GMT)

மராட்டியத்தில் வருகிற 7-ந்தேதிக்குள் புதிய அரசு பதவி ஏற்காவிட்டால், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்று பாரதீய ஜனதா மூத்த தலைவரும், நிதி மந்திரியுமான சுதீர் முங்கண்டிவார் தெரிவித்தார்.

மும்பை,

மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் முடிவுகள் வெளியாகி இன்றுடன் 10 நாட்களாகிறது. புதிய அரசு அமைவதில் இழுபறி நிலவுகிறது.

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபையில் 161 இடங்களை பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கைப்பற்றினாலும், இரு கட்சிகளிடையே அதிகார பகிர்வில் மோதல் போக்கு நிலவுகிறது.

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி., மும்பையில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், “ஆட்சியில் 50:50 பார்முலா (சம பங்கு) அடிப்படையில்தான் மக்கள் தீர்ப்பு அளித்து உள்ளனர். இந்த திட்டம் மக்கள் மத்தியில் சென்றடைந்து உள்ளது. சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்-மந்திரியாக இருப்பார்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

பாரதீய ஜனதா உடன்பாட்டுக்கு வராத பட்சத்தில், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதையொட்டி சரத்பவாரை சஞ்சய் ராவத் சந்தித்து பேசியதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் பாரதீய ஜனதா மூத்த தலைவரும், நிதி மந்திரியுமான சுதீர் முங்கண்டிவார் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “எங்கள் இரு கட்சிகளும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் மக்கள் தீர்ப்பு. விரைவில் கூட்டணி அரசு அமையும். ஒருவேளை வழங்கப்பட்ட காலத்துக்குள் (வரும் 7-ந்தேதி) புதிய அரசு அமையவில்லை என்றால், விதிமுறைகளின்படி ஜனாதிபதி தலையிடுவார். அவர் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவார்” என தெரிவித்தார்.

இது மராட்டிய மாநில அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே பீட் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஸ்ரீகாந்த் விஷ்ணு, “புதிய அரசு பதவி ஏற்கும் வரை முதல்-மந்திரி பதவியை என்னிடம் ஒப்படைக்கவேண்டும். நான் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்கு நீதி கிடைக்க செய்வேன்” என்று கோரிக்கை விடுத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story