ஜார்கண்ட் சட்டசபைக்கு தேர்தல்: வரும் 30-ந் தேதி தொடங்கி 5 கட்டங்களாக நடக்கிறது


ஜார்கண்ட் சட்டசபைக்கு தேர்தல்: வரும் 30-ந் தேதி தொடங்கி 5 கட்டங்களாக நடக்கிறது
x
தினத்தந்தி 1 Nov 2019 11:39 AM GMT (Updated: 1 Nov 2019 7:36 PM GMT)

ஜார்கண்ட் சட்ட சபைக்கு வரும் 30-ந் தேதி தொடங்கி 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

புதுடெல்லி,

ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி ரகுபர்தாஸ் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

81 இடங்களை கொண்டுள்ள ஜார்கண்ட் சட்டசபையின் ஆயுள் 2020-ம் ஆண்டு, ஜனவரி 5-ந் தேதி முடிகிறது. இதையொட்டி அங்கு சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் ஜார்கண்ட் சட்டசபைக்கு வரும் 30-ந் தேதி தொடங்கி 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதாக அறிவித்தார்.

இந்த மாநிலத்தில் 81 சட்டசபை தொகுதிகளே உள்ள நிலையில், 5 கட்டங்களாக தேர்தல் நடத்த காரணம், நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலம் என்பதுதான்.

ஜார்கண்டில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருகின்றன.

முதல் கட்ட தேர்தல் நவம்பர் 30-ந் தேதியும் (13 தொகுதிகள்), 2-வது கட்ட தேர்தல் டிசம்பர் 7-ந் தேதியும் ( 20 தொகுதிகள்), 3-வது கட்ட தேர்தல் 12-ந் தேதியும் (17 தொகுதிகள்), 4-வது கட்ட தேர்தல் 16-ந் தேதியும் (15 தொகுதிகள்), 5-வது இறுதி கட்ட தேர்தல் 20-ந் தேதியும் (16 தொகுதிகள்) நடக்கிறது.

முதல் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் வரும் 6-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது.

5 கட்ட தேர்தலும் முடிந்த பின்னர் ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 23-ந் தேதி நடக்கிறது.

மராட்டிய, அரியானா சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து இரு மாநிலங்களிலும் ஆளும் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மை பலம் பெறாமல் தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள நிலையில், ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கு ரகுபர்தாஸ் தலைமையில் ஆட்சியை தக்க வைக்க பாரதீய ஜனதா கட்சி போராடும். அதே நேரத்தில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி தீவிரமாக களம் இறங்க உள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்ய உள்ள ஒரே முதல்-மந்திரி ரகுபர்தாஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story