லட்சக்கணக்கான இந்தியர்களின் ஏ.டி.எம்., கிரெடிட் கார்டு விவரங்கள் விற்பனை


லட்சக்கணக்கான இந்தியர்களின் ஏ.டி.எம்., கிரெடிட் கார்டு விவரங்கள் விற்பனை
x
தினத்தந்தி 2 Nov 2019 3:15 AM IST (Updated: 2 Nov 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

லட்சக்கணக்கான இந்தியர்களின் ஏ.டி.எம்., கிரெடிட் கார்டு விவரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பெங்களூரு,

ரொக்க பயன்பாட்டை தவிர்த்து, மின்னணு பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால், மின்னணு பரிமாற்றத்தில் இணையவழி குற்றவாளிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.

இதை உணர்த்தும்வகையில், அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜோக்கர்ஸ் ஸ்டாஷ் என்ற நிழல் உலக வலைத்தள சந்தையில், இணைய குற்றவாளிகளுக்கு சாதகமான தகவல்கள் இடம் பெறுவது வழக்கம். தற்போது, இந்த வலைத்தள சந்தையில், உலகம் முழுவதும் சுமார் 13 லட்சம் பேரின் ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த விவரங்களை பெற்று, ஆன்லைன் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தலாம். அல்லது, போலி கார்டு தயாரித்து பயன்படுத்தலாம். எனவே, வாடிக்கையாளர்களின் பணம் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஒரு கார்டை பற்றிய விவரத்தின் விலை 100 டாலர் ஆகும். இந்திய மதிப்பில், ரூ.7 ஆயிரத்து 100. மொத்த கார்டு விவரங்களின் மதிப்பு 13 கோடி டாலர் (ரூ.923 கோடி). இந்த கார்டுகளில், 98 சதவீத கார்டுகள், இந்தியாவை சேர்ந்தவர்களின் கார்டுகள் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள மொத்த ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 97 கோடியே 17 லட்சம் ஆகும். இவற்றில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்டு விவரங்கள் திருடு போயுள்ளன.

ஏ.டி.எம். எந்திரத்திலும், பாயிண்ட் ஆப் சேல் கருவியிலும் கார்டுகளை பயன்படுத்தும்போது, அவற்றில் பொருத்தப்பட்ட ‘ஸ்கிம்மர்’ கருவி மூலம் இந்த விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக சிங்கப்பூரை சேர்ந்த ‘குரூப் ஐபி’ என்ற நிறுவனம் கூறியுள்ளது. இது, இணைய குற்றங்களை தடுப்பதிலும், கண்டறிவதிலும் அனுபவம் பெற்ற நிறுவனம் ஆகும்.

அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இலியா சச்கோவ் கூறியதாவது:-

நிழல் உலக சந்தையில் இந்த பிராந்தியத்தை சேர்ந்த கார்டுகளின் விவரங்கள் மிகவும் அரிதாகவே கிடைக்கும். ஆனால், கடந்த 12 மாதங்களில் இந்திய வங்கிகளை சேர்ந்த கார்டு விவரங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம்.

விற்பனைக்கு உள்ள கார்டு விவரங்களில், 18 சதவீதம் கார்டு விவரங்கள், ஒரே ஒரு இந்திய வங்கியின் கார்டுக்கு உரியவை. பலதரப்பட்ட வங்கிகளின் கார்டு விவரங்கள் திருடப்பட்டதால், ஒரே ஒரு வங்கியை குறிவைத்து நடத்தப்பட்ட இணைய தாக்குதலாக தோன்றவில்லை. பரவலான பாதுகாப்பு குளறுபடியாகவே தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதம், அமெரிக்கர்களின் 21 லட்சம் கார்டுகளின் விவரங்கள், இதே வலைத்தள சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, இந்தியர்களின் கார்டு விவரங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 32 லட்சம் ஏ.டி.எம். கார்டுகளின் விவரங்கள் திருடப்பட்டன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ‘சிப்’ பொருத்தப்பட்ட கார்டுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story