மராட்டியத்தில் புதிய அரசு அமைக்கப்போவது யார்? - இழுபறி நீடிப்பு


மராட்டியத்தில் புதிய அரசு அமைக்கப்போவது யார்? - இழுபறி நீடிப்பு
x
தினத்தந்தி 2 Nov 2019 10:30 PM GMT (Updated: 2019-11-03T03:17:24+05:30)

மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் என்று பா.ஜனதா மந்திரி கூறியதற்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் 161 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா, சிவசேனா கூட்டணி (105-56) ஆட்சி அமைப்பதில் 10 நாட்களாக இழுபறி நீடித்து வருகிறது.

முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டுகள் சுழற்சி அடிப்படையிலும், மந்திரி பதவிகளை சரிசமமாகவும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை பா.ஜனதா நிராகரித்துவிட்டதால் இந்த இழுபறி தொடர்கிறது.

இந்தநிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்து வருகிறது. இதுதொடர்பாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் போனில் பேசி ஆலோசனை நடத்தினர்.

சிவசேனாவின் திட்டம் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் சந்தித்து பேச சரத்பவார் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

காங்கிரசை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. உசேன் தல்வாய் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், “ஜனாதிபதி தேர்தலின்போது காங்கிரஸ் வேட்பாளர்கள் பிரதீபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி ஆகியோரை சிவசேனா ஆதரித்தது. எனவே ஆட்சியமைக்க சிவசேனா ஆதரவு கேட்டு வந்தால், அதை நிச்சயம் ஆதரிக்க வேண்டும். இதன்மூலம் பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து விரட்ட முடியும்” என்று கூறியுள்ளார்.

ஆனால் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் தலைவர்களான சுஷில்குமார் ஷிண்டே, சஞ்சய் நிருபம் ஆகியோர் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் நேரடியாக ஆட்சியில் பங்கேற்க கூடாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிறிய கட்சிகள், சுயேச்சைகள் ஆகியோருடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் மறைமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடியுமா? என்பது குறித்தும் சிவசேனா ஆலோசித்து வருகிறது.

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி., “ஆட்சியமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை சிவசேனா ஒரு போதும் நிறுத்தவில்லை. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தொடங்கவும் இல்லை. விதிமுறைகளின்படி தனிப்பெரும் கட்சியை (பா.ஜனதா) ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பார். ஆனால் அரசு அமைய 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அவசியம். காங்கிரஸ் எம்.பி. உசேன் தல்வாய் சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறியதை வரவேற்கிறோம். ஆனாலும் நாங்கள் கூட்டணி தர்மத்தை காப்பாற்ற கடைசிவரை முயற்சிப்போம்” என்றார்.

7-ந் தேதிக்குள் புதிய அரசு பதவி ஏற்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் என பா.ஜனதா கூறியதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது. அக்கட்சியின் பத்திரிகையான ‘சாம்னா’வில், “இந்த மிரட்டல் பேச்சுக்கு என்ன அர்த்தம். ஜனாதிபதி உங்கள் சட்டைப்பைக்குள் இருக்கிறார் என்பதா? அல்லது ஜனாதிபதியின் முத்திரை பா.ஜனதா அலுவலகத்தில் இருக்கிறதா? அந்த முத்திரையை பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவருவோம் என பா.ஜனதா சொல்ல முயற்சிக்கிறதா?” என்று கூறப்பட்டுள்ளது.

சிவசேனா ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வரும் என்று பா.ஜனதா நம்பியுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “இன்னும் சில நாட்களே இருந்தாலும் எங்கள் கூட்டணி கட்சியான சிவசேனா பேச்சுவார்த்தைக்கு வரும் என்று நம்புகிறோம். அப்போது பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும்” என்றார்.

ஒருவேளை சிவசேனா ஒத்துழைக்கவில்லை என்றாலும் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றியும் பா.ஜனதா ஆலோசித்து வருகிறது. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பா.ஜனதா தனித்து ஆட்சி அமைப்பது என்றும், நம்பிக்கை ஓட்டெடுப்பில் 15 சுயேச்சைகள், சிறிய கட்சிகள் ஆதரவுடன் வெற்றிபெறுவது என்றும் திட்டமிட்டுள்ளது.


Next Story