முதல் மந்திரி பதவி பற்றி மட்டுமே பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்; சிவசேனா தலைவர்


முதல் மந்திரி பதவி பற்றி மட்டுமே பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்; சிவசேனா தலைவர்
x
தினத்தந்தி 3 Nov 2019 6:44 AM GMT (Updated: 3 Nov 2019 6:44 AM GMT)

முதல் மந்திரி பதவி பற்றி மட்டுமே பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 24ந்தேதி வெளியானது. இதில் ஆளும் கூட்டணி கட்சிகளான பா.ஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 தொகுதிகளும் கிடைத்தன.

எனினும், ஆட்சி அமைக்க போதிய தொகுதிகளை பா.ஜ.க. பெறாத நிலையில், அக்கட்சிக்கும் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கும் இடையே அதிகார பகிர்வில் ஒப்புதல் ஏற்படவில்லை.

இதுபற்றி ராவத் கூறும்பொழுது, அரசு அமைப்பது பற்றி எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை.  ஒருவேளை பேச்சுவார்த்தை நடைபெறும் எனில், அது முதல் மந்திரி பதவி பற்றி மட்டுமே இருக்கும் என கூறியுள்ளார்.

கடந்த மாதம் பருவந்தவறிய மழையால் ஏற்பட்ட பயிர் இழப்புகளை ஆய்வு செய்வதற்காக கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே அவுரங்காபாத் நகரில் இன்று தங்கி இருக்கிறார் என்று கூறினார்.

ஆணவம் என்ற சேற்றில் தேர் சிக்கியது போன்று அரசு அமைக்கும் விசயம் உள்ளது என்று அக்கட்சியின் சாம்னா பத்திரிகையில் ராவத் தெரிவித்திருந்த நிலையில், மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான தைரியம் பா.ஜ.க.வுக்கு இருக்குமெனில் அதனை அவர்கள் செயல்படுத்தட்டும் என்றும் சவாலாக கூறினார்.

தொடர்ந்து அவர், இதுபோன்ற நடவடிக்கையானது அக்கட்சிக்கு இந்த நூற்றாண்டின் மிக பெரிய தோல்வியாக இருக்கும் என்றும் கூறினார்.

Next Story