பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பையும் பெகாசஸ் ஸ்பைவேர் தாக்கியுள்ளது - காங்கிரஸ் புகார்


பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பையும் பெகாசஸ் ஸ்பைவேர் தாக்கியுள்ளது - காங்கிரஸ் புகார்
x
தினத்தந்தி 3 Nov 2019 12:04 PM GMT (Updated: 3 Nov 2019 12:04 PM GMT)

பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பையும் பெகாசஸ் ஸ்பைவேர் தாக்கியுள்ளது என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரது ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் அவர்களது செல்போன்களில் ஊடுருவி திருடப்பட்டதாக அந்த நிறுவனம் 3 நாட்களுக்கு முன்பு தெரிவித்தது.

கடந்த மே மாதம் இஸ்ரேல் நிறுவனம் உருவாக்கியுள்ள மென்பொருளை பயன்படுத்தி சில உளவு நிறுவனங்கள் உலகம் முழுவதும் உள்ள 1,400 பேரின் தகவல்களை திருடியுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்தவர்களும் அடக்கம் என்று அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் ‘வாட்ஸ்-அப்’ நிறுவனம் கூறியிருந்தது.

இந்த பிரச்சினை உடனடியாக சரிசெய்யப்பட்டது என்றும், இதுபற்றி இந்தியா மற்றும் இதர நாட்டு அரசுகளுக்கும் தெரிவிக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் பதில் அளித்தது.

இந்த சம்பவத்துக்காக காங்கிரஸ் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. மத்திய அரசின் பல நடவடிக்கைகள் தோல்வி அடைந்துள்ளதற்கு மத்தியில், அரசு தனது நாட்டு மக்களிடமே பொய் சொல்வதற்கு தயங்குவது இல்லை. அரசுக்கு இந்த தகவல் திருட்டு பற்றி தெரியும் என்றால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல் ஆகியோரின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் மெசேஜ் அனுப்பியதாக தகவல் வெளியானது.

இதனைத்தொடர்ந்து உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் மொபைல் போனும் ஹேக் செய்யப்பட்டதாக வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்பியதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- 

மேற்குவங்க முதல்-மந்திரி  மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல் ஆகியோரின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படும் காலத்திலேயே பிரியங்கா காந்தியின் பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பையும் பெகாசஸ் ஸ்பைவேர் தாக்கியுள்ளது.

வாட்ஸ் ஆப் நிறுவனம் பிரியங்கா காந்திக்கு மெசேஜ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும். மத்திய அரசு அமைதியாக இருப்பதில் அர்த்தமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story