மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் 11-வது நாளாக இழுபறி: முதல்-மந்திரி பதவியை கைப்பற்றுவதில் சிவசேனா தீவிரம்


மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் 11-வது நாளாக இழுபறி: முதல்-மந்திரி பதவியை கைப்பற்றுவதில் சிவசேனா தீவிரம்
x
தினத்தந்தி 3 Nov 2019 11:15 PM GMT (Updated: 2019-11-04T03:05:02+05:30)

மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் 11-வது நாளாக இழுபறி நீடித்து வரும் நிலையில், முதல்-மந்திரி பதவியை கைப்பற்றுவதில் சிவசேனா தீவிரமாக இருக்கிறது.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் 24-ந் தேதி வெளியானது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளான பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் 161 இடங்களை கைப்பற்றியதால் எளிதாக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சிவசேனா முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் 2½ ஆண்டுகளுக்கு கேட்கிறது. அதேநேரம் அந்த பதவியை விட்டுக்கொடுக்க பாரதீய ஜனதாவும் தயாராக இல்லை. தற்போதைய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் புதிய அரசு அமைய வேண்டும் என்று அந்த கட்சி விரும்புகிறது.

இதனால், தேர்தல் முடிவு வெளியாகி 11 நாட்கள் ஆகியும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த பிரச்சினைக்கு நேற்று பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு மாறாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் மராட்டியத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

இதற்காக அவுரங்காபாத் சென்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அங்கு நிருபர்களிடம் பேசுகையில், “சிவசேனா ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரியும்” என்றார்.

இந்தநிலையில் நேற்று வெளியான சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வின் தலையங்கத்தில், சிவசேனா தலைமையில் ஆட்சி அமையும் என்று எழுதப்பட்டு உள்ளது.

அந்த தலையங்கத்தில், “மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முடியுமா? எங்கள் ஆதரவு இல்லாமல் சட்டசபையில் பாரதீய ஜனதாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா? பா.ஜனதா மெஜாரிட்டியை நிரூபிக்கவில்லையெனில், 2-வது பெரிய கட்சியான சிவசேனா ஆட்சியமைக்க உரிமை கோரும். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சில சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுடன் சேர்த்து சிவசேனாவுக்கு 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது. எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார்” என்று கூறப்பட்டு உள்ளது.

இதுபோல் அக்கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் எம்.பி.யும் “புதிய அரசை அமைப்பது குறித்து இதுவரை பா.ஜனதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அப்படி நடந்தாலும், முதல்-மந்திரி பதவி குறித்து மட்டுமே பாரதீய ஜனதாவுடன், சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தும்” என திட்டவட்டமாக கூறி இருக்கிறார். இதனால், முதல்-மந்திரி பதவியை கைப்பற்றுவதில் சிவசேனா உறுதியாக இருப்பது தெரியவந்து உள்ளது.

“170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சிவசேனா எந்த அடிப்படையில் கூறியது என்பது பற்றி தங்களுக்கு தெரியாது” என்று தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர் அஜித் பவார் கூறி உள்ளார்.

இதற்கிடையே சிறிய கட்சிகள், சுயேச்சைகளுடன் சேர்ந்து சிறுபான்மை அரசை அமைக்க பாரதீய ஜனதா முயற்சி செய்து வருகிறது. 6 அல்லது 7-ந்தேதி தங்கள் கட்சி ஆட்சி அமைக்கும் என மந்திரி சுதீர் முங்கண்டிவார் கூறி உள்ளார்.

மற்றொருபுறம், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து புதிய ஆட்சி அமைக்க சிவசேனா காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது.

சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் சிலர், கட்சியின் தலைவர் சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முதல்-மந்திரி பட்னாவிஸ் இன்று (திங்கட்கிழமை) டெல்லி சென்று பாரதீய ஜனதா தலைவரும் மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்.

இதேபோல் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச உள்ளார்.


Next Story