கொல்கத்தாவில் சர்வதேச இந்திய அறிவியல் திருவிழா - பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்


கொல்கத்தாவில் சர்வதேச இந்திய அறிவியல் திருவிழா - பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 4 Nov 2019 5:00 AM IST (Updated: 4 Nov 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

கொல்கத்தாவில் சர்வதேச இந்திய அறிவியல் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

கொல்கத்தா,

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை சாதனை மாணவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தொழில்நிபுணர்கள், விவசாயிகள், அறிவியலாளர்கள் ஆகியோருடன் இணைந்து கொண்டாடும் வகையிலும், உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் அனைத்து இந்தியர்களையும் அரவணைத்து செல்லும் வகையிலும் சர்வதேச இந்திய அறிவியல் திருவிழாவினை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.

அந்த வகையில் 5-வது சர்வதேச இந்திய அறிவியல் திருவிழா மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிஸ்வ பங்களா கன்வென்ஷன் சென்டர் மற்றும் கொல்கத்தா அறிவியல் நகரம் ஆகிய 2 இடங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 8-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது.

இதனை பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் இருந்தவாறு ‘காணொலி’ காட்சி மூலமாக தொடங்கிவைக்கிறார். விழாவில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன், செயலாளர் ஆசுதோஷ் சர்மா உள்பட பலர் கலந்துகொள்கின்றனர். இந்த அறிவியல் திருவிழாவில் பெண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கு உள்பட 28 வகையான நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.


Next Story