பா.ஜனதா கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேற வேண்டும் - தேசியவாத காங்கிரஸ் பகிரங்க நிபந்தனை


பா.ஜனதா கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேற வேண்டும் - தேசியவாத காங்கிரஸ் பகிரங்க நிபந்தனை
x
தினத்தந்தி 5 Nov 2019 10:45 PM GMT (Updated: 5 Nov 2019 9:53 PM GMT)

மராட்டியத்தில் மாற்று அரசு அமைக்க வேண்டுமானால் பா.ஜனதா கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேற வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும் தகுதியை பெற்றன. ஆனால் முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி வருகிறது. இதற்கு பாரதீய ஜனதா திட்டவட்டமாக மறுத்தது.

இதற்கு சம்மதிக்காவிட்டால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகள் என 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைப்போம் என பாரதீய ஜனதாவுக்கு சிவசேனா அதிர்ச்சி கொடுத்தது. இந்த இரு கட்சிகளின் பிடிவாதம் காரணமாக மாநிலத்தில் புதிய அரசு அமைவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இதற்கிடையே முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பா.ஜனதா தேசிய தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷாவை சந்தித்து பேசினார். சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் மாற்று அரசு அமைய சிவசேனா விரும்பினால் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முதலில் வெளியேற வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், ‘பா.ஜனதா மற்றும் அந்த கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இனி உறவு இல்லை என சிவசேனா அறிவித்தால் மட்டுமே கூட்டணிக்கான கதவு திறக்கும். மேலும், மத்திய மந்திரி பதவியில் இருந்து சிவசேனாவின் அரவிந்த் சாவந்த்தும் பதவி விலக வேண்டும்’ என்றார்.

இந்த பரபரப்பான நிலையில் பாரதீய ஜனதா- சிவசேனா மோதல் விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். தலையிட வேண்டும் என்றும், மத்திய மந்திரி நிதின் கட்காரி மூலம் பேச்சு நடத்தினால் 2 மணி நேரத்தில் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று சிவசேனா பிரமுகர் கிஷோர் திவாரி கூறினார்.


Next Story