காற்று மாசு அதிகரித்துள்ளதால் வாரணாசியில் கோவிலில் சாமி சிலைகளுக்கு முகமூடி!


காற்று மாசு அதிகரித்துள்ளதால் வாரணாசியில் கோவிலில் சாமி சிலைகளுக்கு முகமூடி!
x
தினத்தந்தி 6 Nov 2019 11:41 AM GMT (Updated: 6 Nov 2019 11:41 AM GMT)

காற்று மாசு அதிகரித்துள்ளதால் வாராணாசியில் உள்ள ஒரு கோவிலில் சாமி சிலைகளுக்கு முகமூடி அணிவிக்கப்பட்டுள்ளது.

வாரணாசி,

வடஇந்திய நகரங்களில் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்று நஞ்சாகி வருவதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். தலைநகர் டெல்லி காற்று மாசுபாட்டால் திண்டாடி வருகிறது. பஞ்சாப், அரியானா விவசாயிகள் அறுவடைக்குப்பின் எஞ்சும் பயிரை அதிக அளவில் தீயிட்டு எரிப்பது வட இந்திய நகரங்களில் காற்று மாசு அதிகரிப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது. 

காற்று மாசுவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நகரங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியும் ஒன்று. இந்தநிலையில், வாரணாசியில் சிக்ரா பகுதியில் பிரசித்தி பெற்ற சிவ-பார்வதி கோவில் உள்ளது.

காற்று மாசு தீவிரமடைந்துள்ளதால் இந்த கோவிலில் உள்ள சிவன், துர்கா தேவி, காளி தேவி, சாய் பாபா ஆகிய சுவாமி சிலைகளுக்கு கோவில் அர்ச்சகர் வெள்ளை துணியைக் கொண்டு முகமூடிகள் போல் மூடி உள்ளனர்.

இது குறித்து கோவில் அர்ச்சகர் கூறுகையில்,

தீபாவளி கொண்டாட்டங்களைத் தொடர்ந்து நகரத்தில் காற்று மாசுபாடு பெருமளவில் அதிகரித்துள்ளது. பொதுவாகக் குளிர்காலங்களில் காற்று மாசுபாடு அதிகரிக்கும் என்பதால் கோவிலில் உள்ள சாமி சிலைகளுக்கு முகமூடி பயன்படுத்தி சாமி சிலைகளைப் பாதுகாப்பது வழக்கம்.

கடவுள் சிலைகளுக்கு முகமூடி அணிவித்திருப்பதைப் பார்த்த பிறகு இக்கோவிலுக்கு வரும் பக்தர்களும் முகமூடி அணியத் தொடங்கியுள்ளனர். இந்த நடவடிக்கை குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Next Story