ஒரு கிலோ நெய், முந்திரி-பாதாம் சாப்பிடும் ரூ.14 கோடி மதிப்புள்ள அருமையான எருமை


ஒரு கிலோ நெய், முந்திரி-பாதாம் சாப்பிடும் ரூ.14 கோடி மதிப்புள்ள அருமையான எருமை
x
தினத்தந்தி 6 Nov 2019 11:47 AM GMT (Updated: 6 Nov 2019 11:47 AM GMT)

ஒரு கிலோ நெய், முந்திரி-பாதாம் சாப்பிடும் ரூ.14 கோடி மதிப்புள்ள 1300 கிலோ எடையுள்ள எருமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயப்பூர்

ஜெய்ப்பூரில் கால்நடை கண்காட்சி நடைபெற்றது. அந்த கண்காட்சியில் முர்ரா இனத்தைச் சேர்ந்த பீம் எருமை மாடுதான்  ஹீரோ. ஆண்டுதோறும்  நடைபெறும் கால்நடை கண்காட்சியில் இரண்டாவது முறையாக பீம்  இடம்பெற்றுள்ளது.

ஜோத்புரில் இருந்து இந்த எருமை மாடு அதன் உரிமையாளர் ஜவகர் லால் ஜாங்கிட் மற்றும் அவரது மகன் அரவிந்த் ஜாங்கிட் உள்ளிட்ட குடும்பத்தினரால் அழைத்து வரப்பட்டு கண்காட்சியில் இடம்பெற வைக்கப்பட்டது.

பீமின் எடை 1,300 கிலோ. வயது ஆறரை ஆண்டுகள். இதன் விலை ரூ.14 கோடி.  முதல் நாளிலேயே, கண்காட்சிக்கு வருவோர் அனைவரையும் கவர்ந்தது பீம். கண்காட்சிக்கு வந்த ஒவ்வொருவரும் பீமுடன் செல்பி எடுத்து கொண்டனர்.

இந்த மாட்டுக்கு பராமரிப்பு மற்றும் உணவுக்காக மாதத்துக்கு ரூ.1.5 லட்சம் செலவாகிறதாம். இந்த மாட்டுக்கு தினமும் ஒரு கிலோ நெய், அரைக் கிலோ வெண்ணெய், 200 கிராம் தேன், 25 லிட்டர் பால், ஒரு கிலோ முந்திரி-பாதாம் ஆகியவற்றைக் கொடுத்து வளர்ப்பதாக ஜவகர் கூறுகிறார்.

சரி நேராக விஷயத்துக்கு வருவோம். இந்த கண்காட்சியில் பங்கேற்கும் முன்பு பீம் மாட்டை ரூ.14 கோடிக்கு கேட்டார்கள். ஆனால் இதை விற்க எங்களுக்கு மனம் வரவில்லை என்கிறார் ஜவகரின் மகன் அரவிந்த்.

கடந்த ஆண்டை விட, பீமின் உடல் எடை 100 கிலோ அளவுக்கு கூடியுள்ளது. அதே சமயம், அதன் விலையும் 2 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.

Next Story