கர்தார்பூருக்குச் செல்ல இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் அவசியம்- தெளிவுபடுத்தியது மத்திய அரசு


கர்தார்பூருக்குச் செல்ல இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் அவசியம்- தெளிவுபடுத்தியது மத்திய அரசு
x
தினத்தந்தி 7 Nov 2019 3:00 PM GMT (Updated: 7 Nov 2019 3:00 PM GMT)

கர்தார்பூருக்குச் செல்ல இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் அவசியம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

புதுடெல்லி,

கர்தார்பூர் வழித்தடம் நாளை மறுதினம் திறக்கப்படுகிறது. கர்தார்பூர் சாஹிப்பிற்கு  இந்தியாவில் இருந்து வரும் யாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என பிரதமர் இம்ரான் கான் அறிவித்த நிலையில், அதனை ஏற்க அந்நாட்டு ராணுவம் மறுத்துள்ளது. இந்திய யாத்ரீகர்கள் அனைவரும் கட்டாயம் பாஸ்போர்ட் கொண்டு வர வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் திடீரென அறிவித்துள்ளது. 

இதனால், இந்திய யாத்ரீகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், கர்தார்பூர்  செல்லும்  இந்தியர்கள் பாஸ்போர்ட் வைத்திருப்பது கட்டாயம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.  இந்திய  வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் தகவல்கள் முரண்பட்டதாக உள்ளது. 

ஒருநேரம் அவர்கள் பாஸ்போர்ட் அவசியம் எனக் கூறுகின்றனர், பிறகு, தேவையில்லை எனக் கூறுகின்றனர். வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் பிற முகமைக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்  மேற்கொண்டுள்ளோம். அதில் மாற்றமில்லை. அதன்படி, பாஸ்போர்ட் அவசியமாகும்” என்றார். 

Next Story