சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை- உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்


சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை- உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
x
தினத்தந்தி 8 Nov 2019 3:50 AM GMT (Updated: 8 Nov 2019 3:50 AM GMT)

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளிவர உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாக கூறப்படுகிற சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பதில் இன்னும் இறுதி முடிவு வரவில்லை. இது தொடர்பான வழக்கை விசாரித்து, இந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30-ந் தேதி அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 14 பேர் மேல்முறையீடு செய்தனர். 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மேல்முறையீட்டு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 பேரை கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து 40 நாள் விசாரணை நடத்தி முடித்துள்ளது. இந்த வழக்குகளின் விசாரணை கடந்த மாதம் 16-ந் தேதி முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வருகிற 17-ந் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த தீர்ப்பு, நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.  இந்த தீர்ப்பினைத் தொடர்ந்து விரும்பத்தகாத விளைவுகள் நடந்து விடாதபடிக்கு பார்த்துக்கொள்வதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்துக்கு, குறிப்பாக அயோத்திக்கு பாதுகாப்பு பணிக்காக 4 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. மேலும் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் விழிப்புடன் இருக்குமாறு உத்தரவை அனுப்பியுள்ளது. இந்த சூழலில், அவசர தேவைகளுக்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் லக்னோவில் தயார் நிலையில்  வைக்கப்படும் என்று உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை ஒன்றும் லக்னோவில் அமைக்கப்பட இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். 

Next Story