சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதல்-மந்திரி ஆவார்: அமித்ஷா, தேவேந்திர பட்னாவிஸ் உதவி தேவையில்லை - உத்தவ் தாக்கரே பேட்டி
சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதல்-மந்திரி ஆவார். அமித்ஷா, தேவேந்திர பட்னாவிஸ் உதவி தேவையில்லை என சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தலில், பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை பெற்றது.
இதனால் இந்த கூட்டணி பிரச்சினை இன்றி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் தலா 2½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. ஆனால் இதை பாரதீய ஜனதா ஏற்க மறுத்து விட்டது.
இரு கட்சிகளின் தொடர் பிடிவாதம் காரணமாக, தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 வாரங்கள் கடந்த போதிலும், மராட்டியத்தில் இன்னும் புதிய அரசு அமையவில்லை.
புதிய அரசு அமைவதில் முடிவு எட்டப்படாத நிலையில் இன்றுடன் பதவிக் காலம் முடிவதால் முதல்-மந்திரி பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார். ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அவர் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர பட்னவிஸ் கூறுகையில்,
உத்தவ் தாக்ரேவை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவர் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனா எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களையே சிவசேனா சந்தித்தது என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இந்நிலையில் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதல்-மந்திரி ஆக்க அமித் ஷா உதவி தேவையில்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தேவேந்திர பட்னாவிஸ் பேட்டியை கேட்டதும் பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தாக்கரே குடும்பம் பொய் சொல்வதாக முதல் முறை குற்றம் சாட்டப்படுகிறது. உண்மையுடன் நிற்க வேண்டும் என்ற எனது தந்தையின் வழியில் நான் நிற்கிறேன்.
நிச்சயம் ஒருநாள் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதல்-மந்திரி ஆவார் என பால்தாக்கரேவிடம் ஏற்கெனவே நான் உறுதி அளித்திருக்கிறேன். அதனை நான் நிச்சயமாக நிறைவேற்றுவேன். அதற்காக அமித் ஷா மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் உதவி தேவையில்லை.
பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எங்களது கதவுகள் திறந்தே உள்ளன. பாஜக எங்களை ஏமாற்றிவிட்டது. அதனால் அவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
சிவசேனா பொய்யர்களின் கட்சி அல்ல. பாஜக எதிரி அல்ல. ஆனால், அக்கட்சி பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். பாஜக அதிகாரத்திற்காக அலைகிறது. தவறான நபர்களுடன் கூட்டணி சேர்ந்துவிட்டதாக நான் உணர்கிறேன். அதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இதுவரை நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story