அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலி; சுப்ரீம் கோர்ட்டு பகுதியில் 144 தடை உத்தரவு
அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலியாக சுப்ரீம் கோர்ட்டு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்புடைய பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.
எனினும், இதற்கு எதிராக அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை, ஆகஸ்டு 6-ந் தேதி முதல் அரசியல் சாசன அமர்வு தினசரி விசாரித்து வந்தது. விசாரணையின் போது சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா தரப்பினர் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணை கடந்த மாதம் 16-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், அயோத்தி மேல்முறையீட்டு வழக்கில் அரசியல் சாசன அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. இதுபற்றிய அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.
அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலியாக சுப்ரீம் கோர்ட்டு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனையொட்டி சுப்ரீம் கோர்ட்டை சுற்றியுள்ள வளாக பகுதியில் பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதேபோன்று பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story