அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை...


அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை...
x
தினத்தந்தி 9 Nov 2019 10:32 AM IST (Updated: 9 Nov 2019 10:32 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதையை பற்றி அறிந்து கொள்வோம்.

புதுடெல்லி,

இந்தியாவில் அந்நிய படையெடுப்பின் ஒரு பகுதியாக முகலாய மன்னர்கள் வடக்கே தங்களது ஆதிக்கத்தினை நிலை நிறுத்தினர்.  இவர்களில் முகலாய மன்னரான பாபர் கடந்த 1528ம் ஆண்டு அயோத்தியில் மசூதி ஒன்றை எழுப்பினார்.  இது ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது.

தொடர்ந்து வந்த பேரரசர்களான அக்பர், ஷாஜகான் போன்றோரால் இதற்கு எதிரான வாதங்கள் எடுபடவில்லை.  இந்நிலையில், கடந்த 1853ம் ஆண்டு அயோத்தியில் முதன்முதலில் பெரும் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் 75 பேர் பலியாகினர்.

பின்பு 1859ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின் போது, இரு மதத்தினரும் வழிபட வழிவகை செய்யப்பட்டது. அதன்படி, உள்ளே முஸ்லிம்கள், வெளியே இந்துக்கள் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டது. இருபுறம் சுவர் எழுப்பி, மோதல் அப்போதைக்கு தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், 1949ம் ஆண்டு மசூதியில் ராமர் விக்ரகம் தென்பட்டதால், முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினரும் மசூதிக்குள் நுழையாதவாறு, அரசு பூட்டு போட்டது. மேலும், ‘அயோத்தி சர்ச்சைக்குரிய இடம்’ என அறிவிக்கப்பட்டது.

இதன்பின்பு 1950ம் ஆண்டு ‘அயோத்தியில் சிலைகளை யாரும் அகற்றக்கூடாது’ என, பைசாபாத் நீதிமன்றத்தில், கோபால் சிங் விஷாரத், வழக்கு தொடர்ந்தார். இது சுதந்திரத்துக்கு பின், அயோத்தி தொடர்பாக நீதிமன்றத்துக்கு சென்ற முதல் வழக்கு ஆகும்.

கடந்த 1959ம் ஆண்டு பிரச்னைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி, பைசாபாத் நீதிமன்றத்தில் நிர்மோகி அகாரா வழக்கு தொடுத்தார்.  ஆனால் கடந்த 1961ம் ஆண்டு உத்தர பிரதேசத்தில், வக்பு சன்னி மத்திய வாரியம், பிரச்சனைக்குரிய இடத்தை தங்கள் வசம் தரும்படி பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த நிலையில் கடந்த 1986ம் ஆண்டு, பூட்டப்பட்ட மசூதியின் உள்ளே சென்று, இந்துக்கள் வழிபடலாம் என, மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதால், முஸ்லிம்கள் போராட்டம் வெடித்தது.

கடந்த 1989ம் ஆண்டு ‘சர்ச்சைக்குரிய இடம் முழுமையாக, கோவில் என அறிவிக்க வேண்டும்’ என்று, பக்தர்கள் சார்பில், வழக்கு தொடரப்பட்டது. பைசாபாத் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நான்கு வழக்குகளும், மூன்று நீதிபதிகள் உடைய அலகாபாத் உயர் நீதிமன்ற பெஞ்சுக்கு மாற்றப்பட்டன.

இந்நிலையில், கடந்த 1991ம் ஆண்டு சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தை உத்தர பிரதேச அரசு கையகப்படுத்தியது. அதை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  அரசே அந்த இடத்தை வைத்திருக்கலாம் என்றும் எவ்வித கட்டுமான பணிகளையும் நடத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ந்தேதி மசூதி இடிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட கலவரத்தில், 2 ஆயிரம் பேர் பலியாகினர்.

கடந்த 2002ம் ஆண்டு மார்ச்சில் குஜராத்தின் கோத்ராவில், அயோத்தி சென்று திரும்பிய கரசேவகர்கள் பயணம் செய்த ரெயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில், 58 பேர் பலியாகினர். இதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஏப்ரல் 2002:  சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என முடிவு செய்ய, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணையை தொடங்கியது.

ஆகஸ்ட் 2003:  மசூதி இருந்த இடத்தில், கோவில் இருந்ததற்கான சான்று இருப்பதாக, தொல்லியல் நிபுணர்கள் ஆய்வில் தெரிய வந்தது.

செப்டம்பர் 2003:  பாபர் மசூதி இடிப்பில், 7 இந்து தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், ஆனால், அத்வானிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்தது.

ஜூலை, 2005:  சர்ச்சைக்குரிய இடத்தின் வளாக சுவரில், வெடிபொருட்கள் ஏற்றிய ஜீப் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களில் 6 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஜூலை, 2009:  பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன், தன் அறிக்கையை 17 ஆண்டுகளுக்கு பின் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை, இன்னும் வெளியாகவில்லை.

செப்டம்பர் 2010:  சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் பற்றிய விசாரணையில், அலகாபாத் ஐகோர்ட்டு அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்து கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு கூறியது.  இதற்கான பணிகள் மூன்று மாதங்களுக்கு பின் தொடங்கப்பட வேண்டும் என தீர்ப்பில் தெரிவித்தது.

மே 2011:  அலகாபாத் நீதிமன்ற தீர்ப்புக்கு, சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.  தொடர்ந்து, அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மூன்று அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பிப்ரவரி 2016:  வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மார்ச் 21, 2017:  இப்பிரச்சனை குறித்து நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் ஏற்படுத்துவது பற்றி சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதி, கேஹர் யோசனை கூறினார்.

பிப்ரவரி 8, 2018:  வழக்கு தொடர்பான தனிநபர் மேல்முறையீட்டு மனுக்களை, சுப்ரீம் கோர்ட்டு விசாரணை மேற்கொண்டது.

மார்ச் 14 2018:  சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு உள்ளிட்ட அனைத்து இடைக்கால மனுக்களையும், சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

செப்டம்பர் 27 2018:  மசூதிகள் என்பது இஸ்லாமுடன் ஒருங்கிணைந்ததில்லை என, கடந்த 1994ம் ஆண்டில் அளித்த தீர்ப்பை, ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஜனவரி 8, 2019:  வழக்கை விசாரிக்க, சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகய் தலைமையில், எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், என்.வி. ரமணா மற்றும் யு.யு. லலித் ஆகிய ஐந்து நீதிபதிகள் அமர்வை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது.

ஜனவரி 10:  அமர்வில் இருந்து விலகுவதாக, நீதிபதி யு.யு. லலித் அறிவித்தார்.

ஜனவரி 25:  ரஞ்சன் கோகய், எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ்.ஏ. நஜீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு நியமிக்கப்பட்டது.

மார்ச் 8:  சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு தலைமையில், மத்தியஸ்தர் குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது.

ஆகஸ்ட் 1:  சமரச பேச்சுவார்த்தை நடத்திய, மத்தியஸ்தர் குழு, இறுதி அறிக்கையை, ‘சீல்’ வைக்கப்பட்ட கவரில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

ஆகஸ்ட் 2:  மத்தியஸ்தர் குழுவின் முயற்சி தோல்வியில் முடிந்தது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

ஆகஸ்ட் 6:  சுப்ரீம் கோர்ட்டு அமர்வு, வழக்கை தினந்தோறும் விசாரிக்க தொடங்கியது.

ஆகஸ்ட் 16:  விசாரணை நிறைவடைந்தது.  தேதி குறிப்பிடாமல், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

நவம்பர் 8:  அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு, நவம்பர் 9ந்தேதி காலை 10:30 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Next Story