மராட்டியத்தில் பா.ஜனதாவுக்கு ஆட்சி அமைக்க விருப்பம் உள்ளதா? - பதில் அளிக்குமாறு கவர்னர் கடிதம்


மராட்டியத்தில் பா.ஜனதாவுக்கு ஆட்சி அமைக்க விருப்பம் உள்ளதா? - பதில் அளிக்குமாறு கவர்னர் கடிதம்
x
தினத்தந்தி 9 Nov 2019 8:03 PM IST (Updated: 10 Nov 2019 3:24 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் பா.ஜனதா கட்சிக்கு ஆட்சி அமைக்க விருப்பம் உள்ளதா? என்பது குறித்து பதிலளிக்குமாறு கவர்னர் கடிதம் அனுப்பினார்.

மும்பை,

மராட்டிய சட்டசபைக்கு தேர்தல் முடிவு வெளியாகி 17 நாட்கள் ஆகியும் புதிய அரசு அமையவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்காமல் மோதல் போக்கை கடைப்பிடித்தன.

முதல்-மந்திரி பதவியை 2½ ஆண்டுகள் தங்களுக்கு தரவேண்டும் என்று சிவசேனா கேட்டதற்கு பா.ஜனதா மறுத்துவிட்டது.

இந்த மோதல் காரணமாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். மாற்று ஏற்பாடு செய்யும்வரை காபந்து முதல்-மந்திரியாக செயல்படுமாறு அவரை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கேட்டுக்கொண்டார்.

தற்போதைய 13-வது மராட்டிய சட்டசபையின் ஆயுட்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. ஆனால் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரவில்லை.

இந்த பரபரப்பான நிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று காலை கவர்னரை சந்தித்து பேசினார். பின்னர் கவர்னர் மாலை அரசின் அட்வகேட் ஜெனரல் ஆசுதோஸ் கும்பகோணியுடன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார். இதனால் கவர்னர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் கவர்னர் நேற்று இரவு பா.ஜனதாவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபை பா.ஜனதா தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் அவருக்கு கவர்னரின் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில், ஆட்சியமைக்க உங்களுக்கு விருப்பம் உள்ளதா?, உங்களால் ஆட்சி அமைக்க முடியுமா? என்பதற்கு பதிலளிக்குமாறு கவர்னர் கூறியுள்ளார்.

தேர்தலில் பாரதீய ஜனதா 105 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சில சுயேச்சைகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், மெஜாரிட்டியை நிரூபிக்க 145 இடங்கள் தேவை என்பதால் அந்த கட்சிக்கு போதுமான பலம் இல்லை.

எனவே கவர்னரின் அழைப்பை ஏற்று பா.ஜனதா ஆட்சி அமைக்க முன்வருமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சி தலைவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்தி முக்கிய முடிவு எடுக்கிறார்கள்.

ஒருவேளை பா.ஜனதா ஆட்சி அமைக்க முன்வராவிட்டால் 56 இடங்களில் வெற்றி பெற்ற 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுப்பார் என்று கூறப்படுகிறது. சிவசேனா தனக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவோடு 170-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறிவருவது குறிப்பிடத்தக்கது.


Next Story