பாரதீய ஜனதாவுடன் மோதல் எதிரொலி: மத்திய மந்திரிசபையில் இருந்து சிவசேனா விலகல் - அரவிந்த் சாவந்த் பதவியை ராஜினாமா செய்தார்


பாரதீய ஜனதாவுடன் மோதல் எதிரொலி: மத்திய மந்திரிசபையில் இருந்து சிவசேனா விலகல் - அரவிந்த் சாவந்த் பதவியை ராஜினாமா செய்தார்
x
தினத்தந்தி 11 Nov 2019 9:51 AM IST (Updated: 12 Nov 2019 4:18 AM IST)
t-max-icont-min-icon

பாரதீய ஜனதாவுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, மத்திய மந்திரிசபையில் இருந்து சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் நேற்று ராஜினாமா செய்தார்.

புதுடெல்லி,

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்ற போதிலும், ஆட்சி அமைப்பதில் அந்த இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை சிவசேனா மேற்கொண்டது. இது தொடர்பாக சிவசேனா தலைவர்கள் சரத்பவாரை சந்தித்து பேசிய போது, “பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறினால் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிக்க தயார்” என்று கூறினார். சரத்பவாரின் இந்த நிபந்தனையை ஏற்பது குறித்து சிவசேனா பரிசீலித்து வந்தது.

இந்தநிலையில், சரத்பவாரின் நிபந்தனையை சிவசேனா நேற்று ஏற்றுக்கொண்டது.

தெற்கு மும்பை தொகுதியில் இருந்து சிவசேனா சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட அரவிந்த் சாவந்த் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசில் கனரக தொழில்கள், பொதுத்துறை நிறுவனங்கள் துறை மந்திரியாக இருந்து வந்தார். அரவிந்த் சாவந்த் நேற்று தனது மந்திரி பதவியை விட்டு விலகினார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து அவர் டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையில், மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துவிட்டதாக கூறிய அவர், ராஜினாமா கடிதத்தையும் காட்டினார்.

அப்போது, “பாரதீய ஜனதாவுடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டதா?” என்று கேட்டதற்கு, “நான் ராஜினாமா செய்து இருப்பதால், அதற்கான அர்த்தத்தை நீங்களே புரிந்து கொள்ள முடியும்” என்று பதில் அளித்தார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது:-

மராட்டிய சட்டசபை தேர்தலுக்கு முன்பே, ஆட்சி அமைப்பது தொடர்பாகவும், பதவிகளை சரிசமமாக பகிர்ந்து கொள்வது தொடர்பாகவும் சிவசேனாவுக்கும் பாரதீய ஜனதாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் அப்படி உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை என்று பாரதீய ஜனதா பொய் சொன்னது சிவசேனா மற்றும் உத்தவ் தாக்கரே குடும்பத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியது. இதனால் அந்த கட்சியுடனான உறவை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மராட்டியத்தில் சிவசேனா ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கும் நிலையில், மத்திய மந்திரிசபையில் நீடிப்பது தார்மீக அடிப்படையில் சரியல்ல என்பதால் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இவ்வாறு அரவிந்த் சாவந்த் கூறினார்.


Next Story