மராட்டியத்தில் ஆட்சி அமைக்க சரத் பவார்- சோனியா காந்தி தீவிரம்


மராட்டியத்தில் ஆட்சி அமைக்க சரத் பவார்- சோனியா காந்தி தீவிரம்
x
தினத்தந்தி 12 Nov 2019 8:34 AM GMT (Updated: 12 Nov 2019 8:34 AM GMT)

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் பேசினார். மராட்டியத்தில் அரசு அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கட்சியின் மூன்று மூத்த தலைவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.

மும்பை,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணியில் மோதல் ஏற்பட்டதால் அந்த கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் தங்களுக்கு 2½ ஆண்டுகள் தருமாறு சிவசேனா விடுத்த கோரிக்கையை ஏற்க பாரதீய ஜனதா மறுத்ததே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

இதையடுத்து 105 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதாவிடம், ஆட்சி அமைக்க விருப்பமா? என்று கவர்னர் பகத்சிங் கோஷியாரி கேட்க, அந்த கட்சி விருப்பம் இல்லை என்று கூறி பின்வாங்கிவிட்டது.

இதனால் 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ள 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை நேற்று முன்தினம்  கவர்னர், ஆட்சி அமைக்க அழைத்தார்.இதனால் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கிய சிவசேனா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை நாடியது.

இந்த நிலையில் ஆதித்ய தாக்கரே மற்றும் சட்டசபை சிவசேனா தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் மாலையில் மும்பையில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்து பேசினார்கள்.

சிவசேனா குழுவினர் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்தனர். மேலும் ஆதரவு கடிதங்களை அளிக்க 3 நாட்கள் அவகாசம் கேட்டனர். ஆனால் அவகாசம் அளிக்க  கவர்னர் மறுத்து விட்டார். 

அடுத்து 3-வது கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியுமா? என்பது பற்றி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணிக்குள் தன்னிடம் தெரிவிக்குமாறு அவர்களிடம் கவர்னர் கேட்டுக் கொண்டார்.

இதனால் மராட்டிய அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.  இதனால் சரத்பவார்  மராட்டியத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தற்போது  ஈடுபட்டு வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் டெலிபோனில்  பேசினார். மராட்டியத்தில்  அரசு  உருவாக்குவது தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகள்  நடத்த கட்சியின் மூன்று மூத்த தலைவர்களுக்கு அதிகாரம்  அளித்துள்ளார்.

முன்னதாக, சோனியா காந்தி கட்சியின் முக்கிய குழு உறுப்பினர்களான ஏ.கே. அந்தோணி  மற்றும் வேணுகோபால் ஆகியோருடன் அவரது இல்லத்தில் ஆலோசனை  நடத்தினார்.

காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் ஆலோசனை நடத்த  மும்பைக்கு புறப்பட்டு உள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தி சரத்பவாரிடம் பேசினார்.   நான் மற்றும்  அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் சரத் பவாரை சந்தித்து ஆலோசனை நடத்துவோம். விரைவில் மூன்று பேரும் மும்பை செல்கிறோம். சரத்பவாரை சந்தித்து ஆலோசனை நடத்துவோம்  என ட்விட்டரில் வேணுகோபால் தகவல் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் அகமது படேல் சரத்பவாருடன் தொலைபேசியில்  பேசினார். தேசியவாத காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் ஒரு உடன்படிக்கைக்கு வந்த பின்னர் சிவசேனா தலைவர்கள் கலந்துரையாடல்களில் சேர வாய்ப்புள்ளது. டெல்லிக்கு வந்து அவர்களுடன் விவரங்களை இறுதி செய்வதாக  காங்கிரஸ் மத்திய தலைமைக்கு சரத் பவார் அறிவித்துள்ளார்.

Next Story