சென்னையில் காற்று மாசு குறைந்து காற்றின் தரம் உயர்ந்திருக்கிறது
இன்று, சென்னையில் காற்று மாசு குறைந்து காற்றின் தரம் உயர்ந்திருக்கிறது.
சென்னை,
ஒவ்வொரு குளிர் காலத்திலும் வட இந்தியாவில் காணப்படும் அதிக அளவு மாசுபாடு, இந்த ஆண்டும் கட்டுப்படுத்தப்படவில்லை. நவம்பர் முதல் வாரத்தில், டெல்லி-என்.சி.ஆர் பிராந்தியத்தைத் தவிர, நாட்டின் கிழக்கு கடற்கரையிலுள்ள நகரங்களும் பி.எம் 2.5 இன் உயர் அளவு மாசு குறைபாடு அளவுகளை பதிவு செய்தன. இந்த காலக்கட்டத்தில் அதிக அளவில் பதிவான நகரங்களில் சென்னை, கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவை அடங்கும்.
தீபாவளிக்குப் பிறகு, டெல்லி என்.சி.ஆரில் மாசு அளவு ஆபத்தான அளவை எட்டியது, இதனால் நகரில் பள்ளிகள் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மூடப்பட்டன. இந்த மாசுகள் வங்காள விரிகுடாவை நோக்கி கிழக்கு நோக்கி பயணிப்பதாகவும், அங்கிருந்து தென்னிந்தியாவின் சில பகுதிகளுக்கு பரவி உள்ளதாக தனியார் வானிலை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் சில இடங்களில் காற்று மாசு காரணமாக கடந்த சில தினங்களாக பனிப்படர்ந்த புகை போன்ற காட்சிகள் பகல் நேரங்களிலும் காணப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று, சென்னையில் காற்று மாசு குறைந்து, காற்றின் தரம் உயர்ந்திருக்கிறது.
சென்னையில் நிலவும் வெப்பமான தட்பவெப்பநிலையால், வீசும் காற்றில் ஈரப்பதம் குறைந்து, காற்றில் மாசு குறைந்திருக்கிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், காற்று வீசும் திசை மற்றும் காற்றின் வேகம் சாதகமாக இருப்பதினால், சென்னையில், படிப்படியாக காற்று மாசு குறைந்து காற்றின் தரம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் காற்றின் தரம் சென்னையில் சராசரியாக 184 ஆக பதிவாகி இருந்தது. இந்த சூழலில், சென்னை மணலியில் காற்றின் தரக் குறியீடு 89ஆகவும், வேளச்சேரியில் 62 ஆகவும், ஆலந்தூர் பகுதியில் 84 என்ற அளவில் காற்றின் தரக் குறியீடு பதிவாகியிருக்கிறது.
இதன்மூலம், சென்னையில் இன்று காலை முதல் காற்றின் தரம் உயர்ந்து, ஒட்டுமொத்த சராசரியாக 78 ஆக பதிவாகியிருப்பதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது. மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் ரியல் டைம் மானிட்டரிங் (Real time monitoring) என்னும் முறையில் சென்னையில் மூன்று இடங்களில் காற்றின் தரம் அளவிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story