தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள் நாளை பாஜகவில் இணைகின்றனர் -எடியூரப்பா பேட்டி


தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள் நாளை பாஜகவில் இணைகின்றனர் -எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 13 Nov 2019 7:22 PM IST (Updated: 13 Nov 2019 7:22 PM IST)
t-max-icont-min-icon

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்களும் நாளை பாஜகவில் இணைகின்றனர் என்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்தது. இதனால் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். காங்கிரசுக்கு துணை முதல்-மந்திரி பதவி ஒதுக்கப்பட்டது.

14 மாதங்கள் குமாரசாமி ஆட்சி நடத்திய பிறகு கூட்டணி கட்சிகளின் 15 எம்.எல்.ஏ.க்கள் திடீரென ராஜினாமா செய்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 23-ந் தேதி குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ராஜினாமா செய்தவர்கள் உள்பட 17 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகாததால், குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா தலைமையில் புதிதாக பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்றது.

காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர்கள் அனைவரும் வருகிற 2023-ம் ஆண்டு வரை கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார். இதில்  3 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 14 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இதனை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், இந்த 17 பேரின் தகுதி நீக்கம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல இவர்கள் அனைவரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் நாளை பாஜகவில் இணைய உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் நாளை காலை 10.30 மணியளவில் எடியூரப்பா மற்றும் மாநில பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
1 More update

Next Story