சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்ற மேலும் 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்
சபரிமலை கோவிலுக்கு செல்ல முயன்ற மேலும் 2 பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரம்,
சபரிமலைக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக நடுத்தர வயதுடைய பெண்கள் சன்னிதானத்துக்கு வந்தால் பாதுகாப்பு அளிக்க முடியாது என மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அய்யப்பன் கோவிலின் நடை சனிக்கிழமை திறக்கப்பட்டது. முதல் நாளில் ரூ.3.30 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி உள்ளது. கோவிலின் நடை திறந்ததில் இருந்து 70,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலில் சரிசனம் செய்துள்ளனர்.
இதனிடையே ஆந்திராவிலிருந்து வந்த பக்தர்களின் வாகனத்தை நிலக்கல் பகுதியில் சோதனையிட்ட போலீசார், அதிலிருந்த 2 பெண்களின் வயது குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
அதில் ஒருவர் 30 வயதுடையவர் என்பதும், மற்றொரு பெண் 40 வயதுடையவர் என்பதும் தெரிய வந்ததையடுத்து அவர்களிருவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சன்னிதானத்திற்கு செல்ல அய்யப்ப பக்தர்கள் மலையேறும் போது உடல்நிலை பாதிக்கப்பட்டால் 12890 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூஹ் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
'பம்பை-சன்னிதானத்திற்கு இடையே 16 அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மலையேறும்போதும், இறங்கும்போதும் இதய நோயாளிகள் மெதுவாக செல்வதோடு இடையிடையே ஓய்வு எடுக்க வேண்டும்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story