ஐதராபாத் கொடூரம்; குற்றவாளிகள் பொதுமக்கள் முன் அடித்து கொல்லப்பட வேண்டும் - மாநிலங்களவையில் ஜெயா பச்சன் எம்.பி. ஆவேசம்


ஐதராபாத் கொடூரம்; குற்றவாளிகள் பொதுமக்கள் முன் அடித்து கொல்லப்பட வேண்டும் - மாநிலங்களவையில் ஜெயா பச்சன் எம்.பி. ஆவேசம்
x
தினத்தந்தி 2 Dec 2019 8:46 AM GMT (Updated: 2 Dec 2019 8:46 AM GMT)

ஐதராபாத்தில் கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் பொதுமக்கள் முன் அடித்து கொல்லப்பட வேண்டும் என மாநிலங்களவையில் ஜெயா பச்சன் எம்.பி. ஆவேசமாக கூறினார்.

புதுடெல்லி,

ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் இன்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இந்த குற்றத்தை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என பல்வேறு கட்சி எம்.பி.க்களும் வலியுறுத்தினர்.

இன்று  மாநிலங்களவையில் பல்வேறு கட்சி எம்.பி.க்களும் இந்த பிரச்சினையை எழுப்பினர். சமாஜ்வாதி கட்சியின் பெண் எம்.பி. ஜெயா பச்சன் பேசும்போது கூறியதாவது:-

"நிர்பயா தொடங்கி எத்தனையோ சம்பவங்கள் நடந்து விட்டன. ஆனாலும் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர் கதையாகி வருகிறது.

மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றன. ஐதராபாத்தில் நடந்த சம்பவம் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் முன்னிலையில் அடித்துக் கொல்ல வேண்டும்"’ என கூறினார்.

அதிமுக எம்.பி. விஜிலா சத்தியானந்த் பேசும்போது,

"நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி வருகிறது" என வேதனை தெரிவித்தார்.

மக்களவையிலும் இதுதொடர்பாக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  இதற்கு பதிலளிக்கையில், ‘பாலியல் பலாத்காரம் போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது'  என கூறினார்.

Next Story